Last Updated : 17 Sep, 2018 01:19 PM

 

Published : 17 Sep 2018 01:19 PM
Last Updated : 17 Sep 2018 01:19 PM

விலைவாசியைக் குறையுங்கள்; பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் இல்லை: மோடிக்கு எச்சரிக்கை விடுத்த பாபா ராம்தேவ்

நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால், தேர்தலில் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் எச்சரித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் போல், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் நான் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு பாபா ராம்தேவ் பங்கேற்றார்.

அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துப் பேசியதாவது:

''பிரதமர் மோடியின் ஆட்சியில் பாராட்டக்கூடிய பல்வேறு அம்சங்கள், திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், சில விஷயங்களில் ஏற்பட்டுள்ள தவறுகளைத் திருத்திக்கொள்வதும் அவசியம். இன்றைய சூழலில் பொருட்களின் விலைவாசி உயர்வு என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இந்த விலைவாசி உயர்வைப் பிரதமர் மோடி விரைவில் சரி செய்வார் என்று நம்புகிறேன்.

ஒருவேளை விலைவாசி உயர்வைக் கண்டுகொள்ளாமல் மோடி விட்டுவிட்டால், 2019-ம் ஆண்டு தேர்தலில் மோடியும், பாஜகவும் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.

விலைவாசி உயர்வு மட்டுமல்ல, பெட்ரோல, டீசல் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பைக் குறைக்க பாஜக அரசும், மோடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனக்கு பாஜக ஆட்சி மீது நம்பிக்கை இருக்கிறதா என்பது விஷயமல்ல. நான் நடுநிலையானவன். இடது சாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல. மக்களைப் பாதிக்கும் பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் போது யாரும் மவுனியாக பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. நான் நடுநிலையாளர், மிகத் தீவிரமான தேசியவாதி.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும், மோடிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்தேன். இந்த முறை ஏன் அவர்களுக்காக நான் பிரச்சாரம் செய்ய வேண்டும். நான் பாஜகவுக்கும், மோடிக்கும் ஆதரவாக 2019-ம் ஆண்டு தேர்தலில் பிரச்சாரம் செய்யமாட்டேன். நான் அரசியல் ரீதியாக ஒதுங்கிவிட்டேன். நான் அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவான மனிதர். நான் சுதந்திரமானவன், யாரையும் சாராதவன்.

பிரதமர் மோடியையும், ஆளும் மத்திய அரசையும் விமர்சிப்பது என்பது இந்திய குடிமகனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை. மத்திய அரசு சிறப்பாக ஆட்சி செய்தால், பாராட்டுவோம், பிரதமர் மோடி நல்ல திட்டங்கள் அறிவித்தால் புகழ்வோம். அதேபோல, தவறான கொள்கைகள் செயல்படுத்தும் போது கண்டிக்கவும், எதிர்க்கவும் செய்வோம்.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த அதை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவந்து குறைவான வரி விதிக்க வேண்டும். மக்களிடம் இருந்து வரியாக அதிகம் வசூலிக்கக் கூடாது. பணக்காரர்களுக்கு அதிகமான வரி விதித்து வருவாயை மத்திய அரசு பெருக்கிக் கொள்ளலாம்.

நாட்டில் அதிகரித்து வரும் பலாத்கார சம்பவங்களால் உலக அளவில் நாட்டுக்கு மிகப்பெரிய தலைக்குனிவு ஏற்படுகிறது. பலாத்காரத்தின் தலைநகராக இந்தியா மாறி வருகிறது. இதை யோகா மூலம் தடுக்க முடியும்.

உடைகளை மிகவும் ஆபாசமாக அணிந்து செல்வதுதான் இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்கக் காரணம். நான் நவீனத்துவத்தை ஏற்பவன். அதற்காக மார்டன் என்ற பெயரில் அரைகுறை ஆடைகளை அணிவதில்லை. நாம் அறிவார்ந்த, பண்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும்''.

இவ்வாறு ராம்தேவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x