Last Updated : 06 Sep, 2018 11:44 AM

 

Published : 06 Sep 2018 11:44 AM
Last Updated : 06 Sep 2018 11:44 AM

மோடியுடன் சந்திப்பு: திருவனந்தபுரம் தொகுதி எம்பி வேட்பாளராக நடிகர் மோகன்லாலை நிறுத்தும் எண்ணமா?

மலையாள நடிகர் மோகன்லால் பிரதமர் மோடியை சந்தித்துத் திரும்பிய சம்பவம் அவரைப் பற்றி பல்வேறு யூகங்களைக் கிளப்பிவிட்டுள்ளது. முக்கியமாக அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்றெல்லாம் வதந்திகள் உலா வருகின்றன....

இதுகுறித்து அவரது நெருங்கிய வட்டாரங்கள் தி இந்துவிடம் (ஆங்கிலம்) பகிர்ந்துகொண்ட தகவல்கள் வருமாறு:

பிரதமர் மோடியை நடிகர் மோகன்லால் சமீபத்தில் சந்தித்தார். அவருடன் 20 நிமிடங்கள் பேசினார். அவ்வளவுதான் அதிலிருந்து ஊகங்கள் ஒவ்வொன்றாக கிளம்பித் தொடங்கிவிட்டன. அவர் அரசியலில் சேரப் போகிறார்; பாஜக அவரை எம்பியாக சேர்த்துக்கொள்ளப் போகிறது என்பதுவரை செய்திகள் பரவின...

மோகன்லாலின் புகழ் வங்கி

வரும் 2019ல் மக்களவை தேர்தலில் வேட்பாளராக திருவனந்தபுரத்தில் நிற்க வைக்க அவரை பரிசீலனைகூட செய்தாகிவிட்டது என்றெல்லாம் வதந்திக்கு கைகால்கள் முளைத்தன.

அவருக்கு இருக்கும் புகழ் வங்கி, அவரது சொந்த ஊர் என்ற உணர்வு போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள கட்சியும் அதை ஊகித்தது என்கிறார்கள் சில அரசியல் நோக்கர்கள். ஆனால் இதை அவரது நெருங்கிய வட்டாரங்கள் மறுத்துவருகின்றன.

சமீபத்தில் மாநிலத்தில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் விழாவில், மோகன்லால் தனது நகரத்தில் இளவயது காலங்களில் ஓடியாடித் திரிந்த நாட்களை ஏக்கத்தோடு நினைவுகூர்ந்தார்.

சினிமாவில் தனக்குள்ள பொறுப்புகளை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டு மோகன்லால் அரசியலுக்கு செல்வதை அவர் விரும்பமாட்டார் என்று தெரிகிறது.

தாய் தந்தை பெயரில் அறக்கட்டளை

மோகன்லால் தனது தாய் தந்தை பெயரில் விஸ்வசாந்தி (தந்தை விஸ்வநாதன் நாயர் அம்மா சாந்தகுமாரி) என்று ஒரு அறக்கட்டளை நிறுவி அதன்மூலம் பழங்குடியின மக்களுக்காக சில தொண்டுப்பணிகளை செய்து வருகிறார்.

உண்மையில் அதைப் பாராட்டத்தான் பிரதமர் மோடி அவரை அழைத்திருந்தார். அதோடு விரைவில் நடைபெற உள்ள தொழில்தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்ள மோகன்லாலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பழங்குடியினர் நலனுக்காக

ஒரு சமூக நல அமைப்பான 'வனவாசி கல்யாண் ஆசிரமம்' வாயிலாக பழங்குடியினர் நலம் சார்ந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பு பழங்குடியினர் மத்தியில் பணியாற்றிவரும் சங் பரிவார் தொண்டர்களைக் கொண்டதாகும்.

இந்த அமைப்புடன் மோகன்லாலுக்கு தொடர்பு உள்ளதாக வதந்திகள் வருகின்றனவே என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, மக்கள் பணியில் ஈடுபடும் இத்தகைய செயல்களில் நிச்சயம் அரசியல் சார்பு இல்லை என்றும் குறிப்பிட்ட மக்கள் குழுவுக்கு நன்மைகள் போய் சேரவேண்டும் என்பதில்தான் அவரது ஈடுபாடு என்றும் இந்த நோக்கத்தில் அவர் உறுதியாக இருந்தார் எனவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் மோகன்லால் தற்போது அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கமில்லை என்றும், பாஜக மூலம் அரசியலில் அறிமகமாகும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் நிச்சயமாக சொல்லமுடியும் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x