Published : 12 Sep 2014 02:03 PM
Last Updated : 12 Sep 2014 02:03 PM

காஷ்மீர் வெள்ளம்: சமூக நல்லிணக்க அடையாளம் ஆன மசூதி

வெள்ள பாதிப்புகளில் இருந்து காஷ்மீர் மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், அம்மாநிலத்தின் ஹைதர்பொரா மசூதி உள்ளிட்ட ஆன்மிகத் தலங்கள் அனைத்து மத மக்களுக்கும் அடைக்கலம் தரும் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்கின்றன.

குறிப்பாக, இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாக இருந்த ஹைதர்பொரா மசூதி இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் முகாமாகவும் இருக்கிறது.

காஷ்மீரின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஹைதர்பொரா பகுதி மட்டும் ஓரளவு தப்பியுள்ளது. பல பகுதிகளிலிருந்து வெள்ளத்தின் தாக்கத்தால் அடித்து செல்லப்பட்டு, மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டவர்கள் மனதில் வலியுடன் இந்த மசூதியில் தற்போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்து வருகின்றனர்.

துயரம் மிக்க அனுபவங்கள்:

நிலமாக இருந்த தங்கள் பகுதிகளை மழை-வெள்ளம் திடீரென சூழ்ந்து கடல் பரப்பாக மாற்றியதையும், இதிலிருந்து மீண்டுவிட முடியாது என்று இருந்த நிலையில், எல்லையிலிருந்து வந்த ராணுவ வீரர்கள் தங்களைக் காப்பாற்றிய விதத்தை இவர்களால் தற்போது யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை.

அரசு பணியாளரான 58 வயது பஷீர் அகமது கூறும்போது, "நானும் எனது குடும்பத்தினரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலை எங்களது உடமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்தோம். தண்ணீர் சூழ்ந்து கொண்டிருந்த வேகத்தில் எங்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு அதுதான். அங்கிருந்து நேராக படகில் ஏறி இந்த மசூதிக்கு வந்து அடைந்தோம். இன்று வரை இங்குதான் இருக்கிறோம்" என்றார்.

கலீதா அக்தர். இவருக்கு வயது 60. தனது 6 குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு தெங்புராவில் மூழ்கிய தனது வீட்டை விட்டு இந்த மசூதியில் தஞ்சம் அடைந்துள்ளார்.

"முதலில் நாங்கள் அருகே இருந்த மருத்துவமனையில்தான் தங்கினோம். ஆனால் அந்தக் கட்டிடமே இடிந்து விழக் கூடிய நிலையில் இருந்தது. அந்த அச்சத்திலேயே அங்கிருந்த பலரை, பல சமூகத்தினரை ஞாயிறு அன்று நள்ளிரவு ராணுவம் வந்து மீட்டு இங்கு அழைத்து வந்தது. இங்கு பாதுகாப்பான சூழலில் இருப்பதை பார்த்துதான் நாங்கள் பெருமூச்சிவிட்டோம். இருப்பிடம் இன்றி தவித்தவர்களுக்கு இடம் அளித்த மசூதி அதிகாரிகளுக்கு நன்றி கூற வேண்டும்" என்றார் கலீதா.

இடையே குறுக்கிட்ட கலீதாவின் மகன், "அந்த இரவு எங்களையும் சேர்த்து 2000 பேருக்கு ராணுவம் உதவி அளித்தது. காவல்துறையினருக்கு மிக பெரிய உதவியாக ராணுவத்தினர் எங்கிருந்தோ வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு எங்கள் உயிரையே காணிக்கையாக கொடுத்துவிடலாம் என்று இப்போது தோன்றுகிறது" என்றார்.

தொலைந்த உறவுகளை இணைத்த மசூதி

தச்சர் வேலை பார்க்கும் மோத் ஆஸிப் (26), தெற்கு காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாகில் உள்ள தனது உறவினரை பார்க்கச் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பும்போது இது சாதாரணமான மழை இல்லை என்று அவருக்குத் தோன்றியது. உடனடியாக வீட்டிற்கு வந்து சேர நினைத்து புறப்பட்டால், அனைத்து சாலைகளும் மாயை போல தண்ணீரால் மூழ்கின. காட்டுப் பகுதியில் தனக்கு தெரிந்த வழியாக மூன்று நாட்கள் நடந்து தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார் ஆஸிப்.

ஆனால், திரும்பி வரும்போது தனது குடும்பத்தினர் யாரும் இல்லை. எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. அங்கு சிக்கியிருந்த சிலர் மட்டும், "யாராவது காணாமல் போனால், ஹைதர்பொரா மசூதிக்கு சென்று தேடுங்கள். அதுதான் இப்போது பாதுகாப்பான பகுதி" என்றனர்.

ராணுவத்தினரின் உதவியோடு ஹைதர்பொரா மசூதிக்கு வந்து சேர்ந்த ஆஸிப், நூற்றுக்கும் அதிகமானோர்களில் தனது தந்தை, தாய் மற்றும் இரண்டு சகோதரிகளை கண்டுபிடித்தார். அடுத்த நாளில், மசூதியை சார்ந்து இருந்த நூற்றுக்கணக்கான எண்ணிக்கை ஆயிரக்கணக்காக மாறியுள்ளது.

தற்போது, இந்த மசூதியில் உள்ளூர் மக்களால் சமூக சமையலறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பலரால் வழங்கப்படும் நிவாரண பொருட்கள், உடைகள் என அனைத்தையும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பகிர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

தினமும் இங்கு சுமார் 2,400 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதாகவும், இதில் பாராமுல்லா, குப்வாரா, சபூர் ஆகிய பகுதிகளின் பல்வேறு சமூக மக்கள் ஒன்றாக வசிப்பதாகவும் மசூதியின் நிர்வாகத் தலைவர் ஹாஜி குலாம் நபி தர் கூறுகிறார்.

"வெள்ளத்தின் அபாயகரத்தை கண்டு நாங்கள் இந்தச் சமூக சமையலறையை உருவாக்கினோம். இதில், அரசின் பங்கு ஒன்றுமே இல்லை. இதனால் மக்களுக்கு அரசின் மீது கோபம் குறையாமல் உள்ளது" என்றார் ஹாஜி குலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x