

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராக இருப்ப தால் பெங்களூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட் டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், வழக்கறிஞர்கள் முன்கூட்டியே பெங்களூரில் குவிந்து வருகின்றனர்.
வழக்கு விவரம்
1991-96-ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.64 கோடி சொத்து குவித்த தாக சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
18 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி' குன்ஹா உத்தரவிட்டார்.
தீர்ப்பையொட்டி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர். ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு கர்நாடக காவல் கூடுதல் ஆணையர் ஹரி சேகரனிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது. ஜெயலலிதா தனி விமானத்தில் வந்து இறங்கவுள்ள ஹெச்.ஏ.எல். விமான நிலையம் முதல் எலக்ட்ரானிக் சிட்டி சாலையில் பயணித்து பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தை அடை வது வரை உள்ள வழித்தடத்தை போலீஸார் ஆராய்ந்தனர்.
6000 போலீஸார் பாதுகாப்பு
இது தொடர்பாக பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி, ‘தி இந்து'விடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக போலீஸாரும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். அன்றைய தினம் பெங்களூர் நகர் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
வெள்ளிக்கிழமை மாலை முதல் தமிழகத்தில் இருந்து பெங்களூர் வரும் அனைத்து வாகனங்களையும் தணிக்கை செய்ய உத்தரவிட்டு இருக்கிறேன். ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் 15 மாவட்ட போலீ ஸாரை தொடர்புகொண்டு அங் குள்ள கட்சியினரை கண்காணிக்கு மாறு கேட்டுள்ளேன். அங்கிருந்து பெங்களூர் வரும் வாகனங்களை அங்கேயே தடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.
பரப்பன அக்ரஹாரா சிறைச் சாலை வளாகத்தில் உள்ள நீதிமன்றம் 24 மணி நேரத்திற்கு முன்பாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் தொடங்கி நீதிமன்ற வாயில் வரை ரகசிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் படும். தீர்ப்பு தினத்தன்று நீதிமன்றத்தை சுற்றி நடக்கும் ஒவ்வொரு அசைவையும் போலீஸார் கண்காணிப்பார்கள். இதற்காக 5000 போலீஸாரை பாது காப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட் டுள்ளோம். இன்னும் தேவை ஏற்பட்டால் கூடுதலாக ஆயிரம் போலீஸாரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவோம்'' என்றார்.
இதனிடையே பெங்களூர் போலீஸாரின் கட்டுப்பாடுகளை அறிந்த கர்நாடக அதிமுகவினரும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அதிமுகவினரும் முன்கூட்டியே பெங்களூரில் குவிந்துள்ளனர்.