Published : 02 Sep 2014 11:40 am

Updated : 03 Sep 2014 08:36 am

 

Published : 02 Sep 2014 11:40 AM
Last Updated : 03 Sep 2014 08:36 AM

‘அஹிம்சை’ இந்தியர்களின் மரபணுவோடு கலந்தது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

அஹிம்சை இந்தியர்களின் மரபணுவோடு கலந்துள்ளது. அணுஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தைவிட அஹிம்சையை கடைப்பிடிக்கும் இந்தியாவின் வாக்குறுதி மேலானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் ஜப்பான் பயணத்தின்போது இரு நாடுகளிடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இப்போதைக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.


அணுஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுடன் மட்டுமே ஜப்பான், அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்கிறது. அந்த ஒப்பந்தத்தில் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. எனினும் இந்தியாவுக்காக விதியை தளர்த்த ஜப்பான் முன்வந்துள்ளது.

இனிமேல் அணுஆயுத சோதனை நடத்தமாட்டோம் என்ற நிபந்தனையுடன் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஜப்பான் முடிவு செய்துள்ளதாக டோக்கியோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பல்கலை.யில் கலந்துரையாடல்

இந்நிலையில் டோக்கியோவில் உள்ள மகளிர் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அணுஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாதது குறித்து ஒரு மாணவி கேள்வி எழுப்பினார். அதற்கு மோடி அளித்த பதில் வருமாறு:

இந்தியா புத்தரின் பூமியாகும். அமைதி, அஹிம்சைக்காக பல்வேறு துன்பங்களை புத்தர் அனுபவித்தார். அஹிம்சை என்பது இந்தியர்களின் மரபணுவோடு கலந்துள்ளது. அணுஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தைவிட காலம் காலமாக அஹிம்சையை கடைப்பிடிக்கும் இந்தியாவின் வாக்குறுதி மேலானது.

உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாகவே இந்தியா கருதுகிறது. அப்படியிருக்கும ்போது குடும்பத்தில் ஒருவரை இந்தியா எப்படி காயப்படுத்தும் என்றார் நரேந்திர மோடி.

சீனா குறித்த கேள்விக்குப் பதில்

சீனா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருவதால் ஆசிய கண்டத்தின் அமைதிக்கு பாதகம் ஏற்படுகிறதே என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பினார். அதற்கு மோடி கூறியதாவது: சீனாவினால் நீங்கள் (மாணவி) அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நாம் நம்மை குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டும். அடுத்தவர்களை பார்க்கக்கூடாது. இந்தியாவும் ஜப்பானும் ஜனநாயக நாடுகள். இருநாடுகளும் இணைந்து ஜனநாயகத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்த முடியும். அமைதி, வளர்ச்சிக்கு மட்டுமே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார்.

மோடி சொன்ன குட்டிக் கதை

மாணவிகளுடன் கலந்துரை யாடியபோது மோடி ஒரு குட்டி கதையை கூறினார்.

‘ஒரு அறையில் முழுமையாக இருள் சூழ்ந்திருந்தது. அந்த அறையை வெளிச்சமாக்க ஒருவர் துடைப்பத்தோடு சென்றார். அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. அடுத்ததாக ஒருவர் வாளோடு உள்ளே நுழைந்தார். அவராலும் அறையை வெளிச்சமாக்க முடியவில்லை. மூன்றாவதாக ஒருவர் படுக்கை விரிப்புகளை எடுத்துச் சென்றார். அவரும் வெறுங்கையோடு திரும்பினார்.

நான்காவதாக ஒரு புத்திசாலி கையில் சிறிய விளக்கோடு அறையில் கால் வைத்தார். அப்போது அந்த அறையில் இருந்து இருள் விலகி வெளிச்சம் பிரகாசித்தது. அமைதி, வளர்ச்சி, ஜனநாயகம் ஆகியவை இருளை விரட்டும் விளக்குகள். அந்த விளக்குகளை ஏற்றி உலகை வெளிச்சமாக்க வேண்டும் என்றார் மோடி.

பேராசிரியராக பாடம் நடத்திய மோடி

கடந்த திங்கள்கிழமை டோக்கியாவில் உள்ள பள்ளிக்கு மோடி சென்றார். அப்போது அங்கிருந்த குழந்தைகளிடம் பேசிய மோடி, “நான் கொஞ்சம் வயது மூத்த மாணவன்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

மகளிர் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது மோடி பேராசிரியராக மாறிவிட்டார். இந்தியா குறித்து மாணவிகளிடம் அவர் விவரித்துக் கூறியதாவது:

இந்தியர்கள் இயற்கையை நேசிப்பவர்கள். நாங்கள் பூமியை தாயாகக் கருதி வணங்குகிறோம். நிலாவை மாமாவாக உரிமைக் கொண்டாடுகிறோம், சூரியனையும், இமயமலையையும் எங்களது மூதாதையர்களாக பாவித்து மரியாதை செய்கிறோம். நதியை தாயாக மதிக்கிறோம். மரங்களை கடவுளாகக் கருதி வழிபடுகிறோம்.

என் கதையைக் கேளுங்கள்

இந்த நேரத்தில் என் சொந்த கதையையும் சொல்ல விரும்புகிறேன். நான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது மாமா மரம் விற்கும் தொழிலைத் தொடங்கினார். ஆனால் கல்வியறிவு இல்லாத எனது தாயார், மரத்தை வெட்டுவது பாவம், அதைவிட பட்டினியாக இருந்துவிடலாம் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

எனது தாயாரைப் போன்று இந்திய தேச மக்கள் அனைவரும் இயற்கையை நேசிப்பவர்கள். பருவநிலை மாற்றம் என்பது நமது பழக்கவழக்க மாற்றத்தால் ஏற்பட்ட பிரச்சினை. நாம் இயற்கைக்கு எதிராகப் போரிடக் கூடாது. இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும்.

பெண்கள் எங்கள் தெய்வம்

வேறு எந்த நாட்டிலும் பெண்களை தெய்வமாக வழி படும் வழக்கம் இல்லை. ஆனால் இந்தியாவில் பெண்களை தெய்வமாக மதித்து வழிபடு கிறோம். கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு லட்சுமி, உலகைக் காப்பதற்கு மகா காளி, மக்க ளுக்கு உணவளிப்பதற்கு அன்ன பூர்ணி என அனைத்து வடிவங் களிலும் பெண் தேவதைகளை வழிபடுகிறோம். இந்திய உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மகளிர் பல்கலைக்கழக நிகழ்ச்சியின்போது அங்கு கல்வி பயிலும் இந்திய மாணவிகள் சேர்ந்து ‘செல்பி’ புகைப்படம் மோடியுடன் எடுத்துக் கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடிஜப்பான் பயணம்மோடி பேச்சுஅணு ஆயுத தடுப்பு ஒப்பந்தம்என்.பி.டி

You May Like

More From This Category

More From this Author