பாத பூஜை செய்யுமாறு கட்டாயப்படுத்துவதாக புகார்: பிடதி ஆசிரம பள்ளிகளில் அதிகாரிகள் விசாரணை - நித்யானந்தா மீது புது வழக்கு?

பாத பூஜை செய்யுமாறு கட்டாயப்படுத்துவதாக புகார்: பிடதி ஆசிரம பள்ளிகளில் அதிகாரிகள் விசாரணை - நித்யானந்தா மீது புது வழக்கு?
Updated on
1 min read

பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் உள்ள பள்ளி மாணவர்களை நித்யானந்தா பாத பூஜை செய்யுமாறு கட்டாயப்படுத்துவதாக கன்னட அமைப்புகள் புகார் எழுப்பினர். இதனைய‌டுத்து ராம் நகர் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர்.

கன்னட சலுவளி கட்சி, கன்னட நவ நிர்மாண் வேதிகே உள்ளிட்ட 7 அமைப்புகள் கூட்டாக சேர்ந்து கடந்த வியாழக்கிழமை மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உமா ஸ்ரீயிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

நித்யானந்தாவின் தியான பீட ஆசிரமம் பெங்களூரை அடுத்துள்ள‌ பிடதியில் இயங்கி வருகிறது. இங்கு இயங்கிவரும் 'நித்யானந்தா குருகுல உண்டு உறைவிட‌ப் பள்ளியில்' பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆசிரமத்துக்கு வெளியே, அவருடைய சீடர்களால் 'நித்யானந்தா வித்யாலயா' என்ற பள்ளியும் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர தியான பீட ஆசிரமத்தில் வார இறுதி நாட்களில் ஆன்மிக வகுப்புகள் நட‌த்தப்படுகின்றன.

இங்கு படிக்கும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பவுர்ணமி தினத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையிலும் குரு பூர்ணிமா விழாவின்போதும் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையை அனைத்து மாணவர்ளும் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். க‌ன்னட குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலையை தடுத்து, நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாரிகள் விசாரணை

இந்தப் புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ராம் நகர் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அமைச்சர் உமாஸ்ரீ உத்தரவிட்டார். இதனையடுத்து அம்மாவட்ட கல்வி அதிகாரி மகா தேவப்பா தலைமையிலான 6 அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பிடதி ஆசிரமத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

நித்யானந்தா குருகுல உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களிடமும் அங்கிருந்த ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையின்போது, பள்ளியிலிருந்த சில புகைப்பட தொகுப்புகள், சில சிடிக்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த விசாரணை குறித்து கருத்து தெரிவிக்க ராம் நகர் மாவட்ட கல்வி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து அமைச்சர் உமாஸ்ரீயிடம் கேட்டபோது, “அதிகாரிகள் இப்போதுதான் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்வதாக கூறியிருக்கிறார்கள். அறிக்கையின் முடிவுகளைப் பொறுத்து நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in