Published : 21 Sep 2018 08:10 AM
Last Updated : 21 Sep 2018 08:10 AM

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் அமெரிக்காவில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷியை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்காவில் அடுத்த வாரம் சந்தித்துப் பேச உள்ளார்.

எல்லையில் அத்துமீறல், மும்பை, பதான்கோட்டில் தீவிரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா, பாகிஸ்தான் உறவில் விரிசல் அதிகமானது. இரு நாட்டு அமைதிப் பேச்சுவார்த்தை முற்றிலுமாக முடங்கியது. இந்தப் பின்னணியில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பினார்.

பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து இம்ரான் கான் கடந்த 14-ம் தேதி பதில் கடிதம் அனுப்பினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இரு நாட்டு மக்களின் நன்மை கருதி காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் அமைதி பாதையில் தீர்வு காண்பது அவசியம். இதற்கு இருநாடுகளிடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். தீவிரவாதம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐ.நா. பொது சபை கூட்டத்தில் இந்திய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துப் பேசலாம். அங்கு சார்க் தலைவர்கள் சந்தித்துப் பேசும்போது இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம். இதன்மூலம் தடைபட்ட அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் வாய்ப்புள்ளது. இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இம்ரான் கானின் கடிதம் குறித்து மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தானின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐ.நா. பொது சபை கூட்டத்தின் போது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்  ஷா மெஹமூத் குரேஷியை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசுவார்.

இந்த சந்திப்பு நடைபெறும் தேதி, நேரம் பின்னர் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஐ.நா.வின் பொது சபை கூட்டம் கடந்த 18-ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வரும் 29-ம் தேதி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகிறார்.

இதற்கு முன்னதாக வரும் 27-ம் தேதி நியூயார்க் நகரில் சார்க் நாடுகளின் தலைவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது இந்திய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x