Published : 21 Sep 2018 11:59 AM
Last Updated : 21 Sep 2018 11:59 AM

உ.பி.யில் அதிர வைத்த என்கவுன்ட்டர்: ஊடகங்களை வரவழைத்து நேரலை செய்த போலீஸ்

உத்தரப் பிரதேசத்தில் ஊடங்களை வரவழைத்து போலீஸார் ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்து நேரலையாக ஒளிபரப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பிறகு தொடர்ந்து என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் சுட்டுக்கொல்லுவதாக கூறப்படுகிறது. இதுவரை 60க்கும் மேற்பட்டோர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், முஸ்டாக்கிம், நவ்சாத் ஆகிய இருவர் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 கொலை சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறி போலீசார் தேடி வந்தனர்.

அவர்கள் இருவரையும் போலீஸார் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்தனர். நேற்று இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீஸார் விரட்டிச் சென்றனர். அப்போது அலிகாரில் உள்ள பழைய கட்டடத்தில் அவர்கள் பதுங்கிக் கொண்டனர்.

இதையடுத்து அந்த பகுதியை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கும் தகவல் அனுப்பி அவர்களை வரவழைத்தனர்.

அந்த பகுதயில் போலீஸாருக்கும், ரவுடி கும்பலுக்கும் நடந்த சண்டையை ஊடகங்கள் நேரலையாக பதிவு செய்தன. இருதரப்பினருக்கும் இடையே நீண்டநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியாக ரவுடிகள் இருவரையும் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். ஊடகங்களை வரவழைத்து போலீஸார் ரவுடிகளை சுட்டுக்கொன்று நேரலையாக ஒளிபரப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச போலீஸாரின் செயலுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் என்கவுன்ட்டர் தொடர்பாக ஊடகங்களுக்கு தாங்கள் தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என உத்தரப் பிரதேச போலீஸார் மறுத்துள்ளனர். அதுபோலவே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இருவரும் வீட்டில் இருந்தபோது போலீஸார் அழைத்துச் சென்று கொன்று விட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x