

மேற்கு வங்கத்தில் பல கோடி ரூபாய் சாரதா நிதி நிறுவன முறைகேட்டில் அந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் சுதிப்தா சென், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் என்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினருமான குணால் கோஷ் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குணால் கோஷ் கொல்கத்தா, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். அப்போது அவர் நீதிபதியிடம், இந்த வழக்கில் தன்னுடன் மம்தா, சுதிப்தா சென் ஆகியோரையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார்.
“சாரதா குழுமம் சார்பில் முதலீட்டுச் சந்தையில் ரூ.1,259 கோடி திரட்டப்பட்டது. இதில் ரூ. 988 கோடி, சாரதா குழுமத்துக்கு முற்றிலும் சொந்தமான பெங்கால் மீடியாவில் முதலீடு செய்யப்பட்டது. பெங்கால் மீடியாவின் முதன்மை செயல் அதிகாரியான குணால் கோஷுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு உள்ளது. ” என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வரும் 12-ம் வரை குணால் கோஷை சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
குற்றவாளிகளை சிறையில் அடைப்போம்: அமித் ஷா
இதனிடையே சாரதா நிதி நிறுவன முறைகேட்டில் தொடர் புடைய அனைவரையும் சிறையில் அடைப்போம் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் அவர் மேலும் பேசும்போது, “இந்த ஊழலில் 17 லட்சம் பேர் முதலீடுகளை இழந்துள்ளனர். இவர்களுக்காக மம்தா தெருவில் இறங்கிப் போராட முன்வரவில்லை. ஏனென்றால் அவரது சகாக்கள் தான் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணம் யாரிடம் உள்ளது என்பது எங்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.
ஊழலில் ஈடுபட்ட கட்சியின ருக்கு மம்தா தண்டனை பெற்றுத் தரவேண்டும். இல்லாவிடில் பதவி விலகவேண்டும். 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் இந்த அரசை வெளியேற்றுவார்கள்” என்றார்.