Last Updated : 01 Sep, 2018 08:40 AM

 

Published : 01 Sep 2018 08:40 AM
Last Updated : 01 Sep 2018 08:40 AM

நலக் காப்பகங்களில் குழந்தைகள் மரணம் குறித்த விசாரணையை 4 வாரத்தில் முடிக்க வேண்டும்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது என்சிபிசிஆர்

‘‘குழந்தைகள் நலக் காப்பகங் களில், குழந்தைகள் இறப்பு குறித்த விசாரணையை மாவட்ட ஆட்சியர் 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும்’’ என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

பிஹார், உ.பி. மாநிலங்களில் குழந்தைகள் நலக் காப்பகங்களில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காப்பகங்களில் குழந்தைகள் இறப்பும் தொடர்ந்து நடக்கிறது. இந்தப் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) புதிய நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் ஸ்ருதி கேக்கர் நேற்று கூறியதாவது:

குழந்தைகள் நலக் காப்பகங் களில் குழந்தைகள் காணாமல் போனாலோ அல்லது இறந்தாலோ அல்லது அவர்கள் மீது பாலியல் தாக்குதல் நடந்தாலோ அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பதற்குத் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை. எனவே, காப்பகங்களில் உள்ள சிறுவர், சிறுமிகளைப் பாதுகாப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) மற்றும் என்சிபிசிஆர் இணைந்து இந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி உள்ளன.

அதன்படி, காப்பகங்களில் குழந்தைகள் மரணம் குறித்த விசாரணையை மாவட்ட ஆட்சியர்கள் 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும். சிறார்கள் மரணம் குறித்து விசாரணை நடத்த தற்போதுள்ள சிறார் நீதி சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான காலக் கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, புதிய நெறிமுறைகளின்படி குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் விசாரணையை முடிக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகள் இறந்தால், 24 மணி நேரத்துக்குள் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு என்சிபிசிஆர் தலைவர் ஸ்ருதி கேக்கர் கூறியுள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x