Published : 06 Sep 2018 01:29 PM
Last Updated : 06 Sep 2018 01:29 PM

ஐபிசி பிரிவு 377 என்றால் என்ன? - 158 ஆண்டு கால பழமையான சட்டம் என்ன சொல்கிறது?

சட்டப்பூர்வ வயது வந்தோர் ஒரே பாலினத்தவராக இருந்தாலும், சுயவிருப்பத்துடன் பாலுறவு கொள்வதில் தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பை இன்று அளித்துள்ளது.

இதற்கு முன் இந்திய தண்டனைச் சட்டம் 377-ன் பிரிவின்படி இயற்கைக்கு மாறாக, ஆண், பெண், அல்லது மிருகங்களுடன் பாலுறவு கொள்வது குற்றமாகவும் அதிகபட்சமாக வாழ்நாள் சிறை அல்லது 10- ஆண்டுகள் வரை தண்டனை வழங்கவும், அபராதமும் வழங்க முடியும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து, 158 ஆண்டு காலச் சட்டம் நடைமுறை காலத்துக்கு செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்திருக்கிறது.

இதில் இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவு என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்:

இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவு என்பது இயற்கைக்கு மாறாக, ஒரே பாலினத்தைச் சேர்ந் ஆண், பெண் அல்லது மிருகங்களுடன் பாலுறவு வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த குற்றத்தின் அடிப்படையைப் பொறுத்து குற்றம்சாட்டப்பட்டவருக்கு வாழ்நாள் சிறை அல்லது 10 ஆண்டுகள் சிறை, அபராதமும் விதிக்கலாம். இதுதான் ஐபிசி 377- பிரிவு வலியுறுத்துகிறது.

ஆனால், இந்தத் தீர்ப்பில் இயற்கைக்கு மாறான முறையில் விலங்குகளுடன், குழந்தைகளுடன் பாலுறவு வைத்துக்கொள்வது குற்றத்துக்குரியது என்ற அம்சத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை, அது தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வயது வந்தோருக்கு இடையே ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர் பாலுறவு கொள்வதில் மட்டும் விலக்கு அளித்துள்ளது.

ஆங்கிலத்தில் இதை “தி பக்கெரி ஆக்ட்” என்று அழைப்பார்கள். இந்த பக்கெரி ஆக்ட் கடந்த 1533-ம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மன்னர் 8-ம் ஹென்றி காலத்தில் சட்டமாக்கப்பட்டது.

தி பக்கெரி ஆக்ட், அதாவது பக்கெரி சட்டம் எனப்படுவது, இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட முதல் பாலியல் தொடர்பான சட்டமாகும் (sodomy law). 1550 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொடர்பான வழக்குகளைக் கிறிஸ்துவ சபைகள் விசாரித்துத் தீர்ப்புகளை வழங்கிய நிலையில், முதல் முறையாக பாலியல் குற்றங்களுக்கு என தனியாக சட்டம் இயற்றப்பட்டது.

அதாவது இயற்கை அல்லது கடவுள் நியதிப்படி மனிதன் பாலுறவு கொள்ள வேண்டும். இயற்கைக்கு மாறான வகையில் கொள்ளும் பாலுறவுகள், கடவுளின் விருப்பத்துக்கு மாறானது. அது தண்டனைக்குரிய குற்றம் என்ற அடிப்படையில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டம் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. நமது அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கும் போது, இந்த ஷரத்துக்களை ஒரு அங்கமாக தத்தெடுத்துக் கொண்டனர். ஆகவே இந்த ஐபிசி 377-வது பிரிவு என்பது உண்மையில் இந்தியாவில் உருவாக்கப்படாத, இங்கிலாந்தில் இருந்து ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட சட்டம் இங்கிலாந்திலேயே மாற்றம் செய்யப்பட்டு, தன்பாலின உறவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

25-க்கும் மேற்பட்ட நாடுகள்

தன்பாலின உறவு, திருமணத்துக்கு இதுவரை 25-க்கும் மேலான நாடுகள் அனுமதி அளித்துள்ளன. குறிப்பாக அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, டென்மார்க், பின்லாந்த், பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பெர்க், மால்டா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா, உருகுவே போன்ற நாடுகள் அனுமதி அளித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x