வளர்ச்சி பாதையில் நாட்டின் பயணம் தொடரும்: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை

வளர்ச்சி பாதையில் நாட்டின் பயணம் தொடரும்: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை
Updated on
1 min read

பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைந்துள்ளதால் வளர்ச்சி பாதையில் நாடு வெற்றி நடைபோடும் என நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து 303 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

மே மாதம் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வது முறையாகப் பதவியேற்றது. இதைத் தொடர்ந்து புதிய மக்களவை திங்களன்று கூடியது.

புதிய மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டு முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. கோட்டா தொகுதி பாஜக எம்.பி. ஓம் பிர்லா சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு வாழ்த்துக்கள். மீண்டும் ஒருமுறை வெற்றி பெறச் செய்து மக்கள் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள இந்த அரசு, மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற இந்த அரசு பாடுபடும். தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்கள். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. வரி செலுத்தும் முறை தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

விவசாய துறையில் ரூ.25 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே, ரியல் எஸ்டேட் துறையில் நடைபெற்று வந்த முறைகேடுகள் தற்போது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை சிறு தொழில் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவுகிறது.

இவ்வாறு குடியரசு தலைவர் தனது உரையில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஜூலை 4-ம் தேதி பொருளாதார ஆய் வறிக்கையும் ஜூலை 5-ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. ஜூலை 26-ம் தேதி கூட்டத்தொடர் நிறைவடைகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in