Published : 04 Jun 2019 06:29 PM
Last Updated : 04 Jun 2019 06:29 PM

வாட்டி வதைக்கும் வெப்பம்: மலைப்பிரதேசங்களும் தப்பவில்லை; வெப்ப அலைக்கு நாடு முழுதும் 5 பேர் பலி

இந்தியாவின் பாதி பகுதி கடும் வெப்ப அலையில் சிக்கித் தவித்து வருகிறது, இதில் ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற நகரம் கடும் வெப்ப நகரமாக ஜூன் 3ம் தேதி 49.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் வாட்டி எடுத்துள்ளது.

 

இந்தியாவின் பாதி பகுதிகளில் வெப்ப அளவு 45 டிகிரி செல்சியஸைத் தொட்டு அச்சுறுத்தி வருகிறது, பனிப்பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர், இமாச்சலம், உத்தராகண்ட் ஆகியவையும் வெப்பத்திற்கு தப்பவில்லை. தெலங்கானா, கர்நாடகாவிலும் கடும் வெப்ப அலை வீசி வருகிறது.

 

ராஜஸ்தானில் ஞாயிறன்று விவசாயி மற்றும் 2 போலீசார் சன் ஸ்ட்ரோக்கிற்கு பலியாக குஜராத் சபர்கந்தா மற்றும் ராஜ்கோட் மாவட்டங்களில் வெப்ப பலி 2 ஆகியுள்ளது.

 

தனியார் வானிலை ஆய்வுமையமான ஸ்கைமெட் தகவல்கலின்படி ராஜஸ்தான் சுருவில் ஜூன் 3ம் தேதி 43.8 டிகிரி செல்சியஸ் வெப்பமும், இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் 48.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

 

நாட்டின் 10 அதிவெப்ப நகரங்களில் 7 இடங்கள் ராஜஸ்தானில் மட்டும் உள்ளது. உலகம் முழுதும் 15 அதிவெப்ப நகரங்களில் 8 நகரங்கள் இந்தியாவில் உள்ளது என்கிறது எல்டொராடோ என்ற இணையதளம்.  மீதி 7 அதிவெப்ப நகரங்கள் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தானின் ஜேகோபாபாத்தில் அதிகபட்சமாக 51.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

 

இந்தியாவில் உள்ள நகரங்களில் பாதி நகரங்களில் வெப்ப அளவு கணிசமாக உயர்ந்து கொண்டிருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக இந்திய வானிலை மைய உதவி தலைமை இயக்குநர் ஆனந்த் சர்மா தனியார் ஊடகம் ஒன்றிற்கு கூறிய போது, “வரும் நாட்களில் வெயில் அளவு, வெப்ப அளவு குறைவதற்கான வாய்ப்பு இல்லை. குறிப்பாக வடமேற்கு இந்தியாவில் குறைய வாய்ப்பில்லை. ஜூன் 6ம் தேதி கேரளாவில் பருவ மழை பெய்யத் தொடங்கிய பிறகு தென்னிந்தியாவில் கொஞ்சம் வெப்பத்திலிருந்து விடுதலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் நாட்டின் பிற பகுதிகள் வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்” என்றார்.

 

பொதுவாக சமவெளிகளில் 40 டிகிரி செல்சியஸ், கடற்கரை பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ், மலைப்பிரதேசங்களில் 30 டிகிரி செல்சியஸ் நிலைகளைக் கடக்கும் போதுதான் இந்திய வானிலை ஆய்வுமையம் வெப்ப அலை என்று அறிவிக்கும்.

 

அடுத்த 2 நாட்களில் பஞ்சாப், மேற்கு உத்தரப் பிரதேசம் டெல்லி ஆகிய நகரங்களில் காற்றின் திசை மாறும் என்பதால் கொஞ்சம் வெயிலிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. இதனால் வெப்ப அளவு 2 டிகிரி அல்லது 3 டிகிரி குறைய வாய்ப்புள்ளது. வெப்ப நிலை குறைகிறது என்பதற்காக ஈரப்பதம் குறையும் என்று பொருளல்ல ஆகவே பிசுபிசுப்பும் வியர்வை ஒட்டும் நாட்களிலிருந்து விடுதலை இப்போதைக்கு இல்லை என்கிறது ஐஎம்டி.

 

பேரழிவு மேலாண்மை தேசியக் கழகத்தின் 2018 அறிக்கையின்படி 1992ம் ஆண்டு முதல் 2015 வரை இந்தியாவில் வெப்ப அலைக்கு 22,562 பேர் பலியாகியுள்ளனர்.

 

அதிக இரவு நேர வெப்ப நிலை:

 

கடந்த சில நாட்களாக வடமேற்கின் பெரும்பான்மை பகுதிகள், மத்திய மற்றும் தீபகற்ப இந்தியாவில் வழக்கத்துக்கு மாறான குறைந்தபட்ச வெப்ப அளவு சற்று அதிகமாக பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் பலோடியில் இரவு நேர வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் இறங்கவில்லை. சராசரி வெப்ப அளவிலிருந்து 9 டிகிரி செல்சியஸ் அதிகம்.

 

மேலும் ஐஐடி காந்திநகர் அறிக்கையின் படி இந்தியாவில் உள்ள நிலப்பகுதிகளில் 46% நிலப்பகுதிகள் வறட்சி நிலைமைகளில் உள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, குஜராத், ஜார்கண்ட், வடகிழக்கு மாநிலங்கள் வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x