Last Updated : 05 Jun, 2019 12:00 AM

 

Published : 05 Jun 2019 12:00 AM
Last Updated : 05 Jun 2019 12:00 AM

பிரதமர் மோடிக்கு முஸ்லிம் பிரமுகர்கள் நன்றி

சிறுபான்மையினர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட கருத்தை ஆதரித்து முஸ்லிம் கல்வியாளர்கள் அவருக்கு நன்றி கடிதம் எழுதியுள்ளனர்.

தேர்தல் வெற்றிக்கு பின்னர், நாடாளுமன்ற அரங்கில் பாஜக எம்.பி.க்கள் முன்பாக பிரதமர் மோடி உரையாற்றினார். அவர்பேசுகையில், ‘‘ஏழைகள் ஏமாற்றப்பட்டது போல், சிறுபான்மையினரும் ஏமாற்றப்பட்டனர். அவர்களின் கல்வி மற்றும் உடல்நலம் மீது கவனம் செலுத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாக்குவங்கி அரசியலை செய்பவர்கள் சிறுபான்மையினரை அச்சத்தின் மத்தியிலேயே வாழ வைத்தார்கள். இந்த நிலைமையை நீங்கள் (எம்.பி.க்கள்) மாற்ற வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பெறுவது அவசியம்" என்றார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு முஸ்லிம்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், அவருக்கு நன்றி தெரிவித்து, நாட்டின் 19 முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தக் கடிதத்தை டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவரும், கல்வியாளருமான கமால் பரூக்கீ, 18 பேர் சார்பில் கையொப்பம் இட்டு அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘தாங்கள் மே 26-ம் தேதி நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினர் குறித்து தெரிவித்த கருத்தை மிகவும் பாராட்டுகிறோம்.

1857 கலகத்தில் அனைத்து மதத்தினரும் பொது முயற்சி எடுத்து சுதந்திரத்துக்காக போராடினர். இதை உறுதியான சுதந்திர இந்தியா பெற அப்போது அனைவரும் கண்ட கனவாக இருந்தது. 1857-ல் நிலவிய அதே உணர்வை மீண்டும் பிரதிபலிக்கும் வகையில் உங்கள் கருத்து இருக்கிறது. சிறுபான்மையினரின் முன்னேற்றத்தின் மீதான உங்கள் முயற்சிக்கு எங்கள் அனைவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கல்வி, உடல்நலம், தொழில்திறனில் முன்னேற்றம், இந்திய அரசியலமைப்பு படி பாதுகாப்பு, சமூக விரோதிகளுக்கு தண்டனை ஆகியவற்றின் மீதும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமரிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கமால் பாரூக்கீ கூறும்போது, ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழும் 50-க்கும் மேற்பட்ட முக்கிய முஸ்லிம்களிடம் இருந்து இந்த கடிதம் எழுதியமைக்கு ஆதரவும் பாராட்டுகளும் குவிந்தபடி உள்ளன' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x