Last Updated : 15 Jun, 2019 07:52 AM

 

Published : 15 Jun 2019 07:52 AM
Last Updated : 15 Jun 2019 07:52 AM

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம்: வறட்சி நிலை, விவசாயிகள் பிரச்சினை குறித்து முக்கிய ஆலோசனை

நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.

2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப் பேற்ற பின்னர், நாட்டின் அடுத்த ஐந் தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங் களை வரையறுக்கும் மத்திய திட்டக் குழு கலைக்கப்பட்டது. பின்னர் அதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் புதிய அமைப்பு உரு வாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, நிதி ஆயோக் அமைப் பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட் டம் டெல்லியில் இன்று நடைபெற வுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநிலங் களின் முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி, உறுப்பினர்களும் பங்கேற்க வுள்ளனர்.

வறட்சி பற்றி விவாதம்

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை, விவசாயிகள் பிரச்சினை, எல்லையில் நிலவி வரும் பாது காப்பு பிரச்சினை, நக்சல் பாதிப்பு மாவட்டங்களில் நிலவி வரும் பிரச் சினை குறித்து கூட்டத்தில் விவாதிக் கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மழை நீர் சேகரிப்புத் திட்டம், மாவட்டங்களை மேம்படுத்தும் திட்டங்கள், விவசாயத் துறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்ட் நடவடிக்கை மற்றும் அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற வுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் 2-வது முறையாக பதவியேற்றுள்ளது. இந்தக் கூட்டணி 2-வது முறையாக பதவியேற்ற பின்னர் நடைபெறவுள்ள முதலாவது நிதி ஆயோக் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மம்தா புறக்கணிப்பு

இதனிடையே, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை எனவும் மாநில அரசு களுக்கு ஒதுக்கீடு அளிக்க உதவி செய்யும் எந்த அதிகாரமும் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் பலனில்லை எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கூட்டங்கள்

நிதி ஆயோக் குழுக்கள் உருவாக்கப் பட்டதிலிருந்து தொடர்ந்து கூட்டங்கள் நடந்திருக்கின்றன. நிதி ஆயோக்கின் முதலாவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் பிப்ரவரி 8, 2015-ல் நடத்தப்பட்டது. இரண்டாவது கூட்டம் ஜூலை 15, 2015-ல் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின்போது முதல்வர் களை இணைத்து மூன்று துணை நிலை குழுக்களும், இரண்டு செயல் படுத்துதல் குழுக்களும் உருவாக் கப்பட்டன.

2017, ஏப்ரல் 23-ல் நடந்த மூன்றா வது கூட்டத்தின்போது பொதுத் தேர்தலையும், சட்டப் பேரவைத் தேர்தலையும் ஒன்றாக நடத்தவும், நிதி ஆண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை என மாற்றவும் முடிவு செய்யப் பட்டது.

ஜூன் 17, 2018-ல் நடந்த நான்காவது கூட்டத்தில் விவசாயிகள் வருமா னத்தை இரட்டிப்பாக்கவும், அரசின் பிரதான திட்டங்களின் செயல்பாடு களை மேம்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன என்பது குறிப் பிடத்தக்கது.

இன்று நடைபெறவுள்ள கூட்டத் தின்போது ஏற்கெனவே நடந்த நிதி ஆயோக் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.

மேலும் எதிர்கால வளர்ச்சி முன் னுரிமைகள் குறித்தும் விவாதிக் கப்படும் என்று தெரியவந்துள்ளது.

ஜெகன் மோகன்

இந்தக் கூட்டத்தில் ஆந்திர முதல்வ ராக அண்மையில் பதவியேற்ற ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி முதன்முறையாக பங்கேற்கவுள்ளார். கூட்டத்தில் பங்கேற்க அவர் நேற்று பிற்பகலில் டெல்லிக்கு வந்தார். இதைத் தொடர்ந்து அவர் பாஜகவின் தேசியத் தலைவரும், மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

நிதி ஆயோக் கூட்டத்தின்போது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருவது தொடர்பான கோரிக்கையை முதல்வர் ஜெகன் மோகன் முன் வைப்பார் எனத் தெரிகிறது.

ஆந்திராவைப் பிரித்து ஆந்திரா, தெலங்கானா என 2 மாநிலங்களாக உருவாக்கப்பட்டபோது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக மத்திய அரசு வாக்களித்திருந்தது குறிப் பிடத்தக்கது.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் டெல்லியில் நடைபெறவுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத் திலும் ஜெகன்மோகன் பங்கேற்க உள்ளார்.

முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றார்: பிரதமரை சந்தித்து மனு அளிக்க திட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். கூட்ட முடிவில், பிரதமரை சந்தித்து தமிழகம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கவும் முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய மத்திய அமைச்சரவை பொறுப் பேற்றுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக் கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக் கிறது. இதில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். டெல்லியில் முதல்வரை தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரதமர் தலைமையில் இன்று காலை நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். பிறகு, கூட்ட முடிவில் பிரதமர் மோடியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். அப்போது, தமிழக அரசின் திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதி ஒதுக்குவது குறித்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளார். இன்று மாலையே உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x