Last Updated : 08 Jun, 2019 12:00 AM

 

Published : 08 Jun 2019 12:00 AM
Last Updated : 08 Jun 2019 12:00 AM

மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை விரைவுபடுத்தும் கர்நாடகா

மத்தியில் பிரதமர் நரேந்திர‌ மோடி தலைமையில் பாஜக அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ளதால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்டத்தை விரைவுபடுத்தும் முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு எனும் இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட மாநில அரசு முடிவெடுத்துள்ளது. 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 48 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்ட உலகளாவிய ஒப்பந்த புள்ளிகளை கோர முடிவு செய்யப்பட்டிருக்கிறது. முதல்கட்டமாக ரூ.25 கோடி செலவில் அதன் திட்டவரைவு அறிக்கை தயாரித்து கடந்த ஆண்டு மத்திய நீர்வளத் துறையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திலும், காவிரி மேலாண்மை ஆணையத்திலும் முறையிட்டுள்ளது. இதனிடையே கடந்த 28-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு திட்டத்தின் வரைவு அறிக்கை குறித்து விவாதிக்க கர்நாடகா அனுமதி கோரியது. இதனை தமிழக அரசு எதிர்த்ததால் ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

இந்நிலையில் மத்தியில் பிரதமர் நரேந்திர‌ மோடி தலைமையில் பாஜக அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ளதால் மேகேதாட்டு திட்டத்தை விரைவுபடுத்த கர்நாடகா முடிவெடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையில் கர்நாடகாவை சேர்ந்த சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், பிரகலாத் ஜோஷி, சுரேஷ் அங்கடி ஆகிய 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மத்திய அமைச்சரவையில் மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி பெற கர்நாடகா திட்டமிட்டுள்ளது. அதேபோல மத்திய நீர்வளத்துறை, வனத்துறை ஆகிய அமைச்சர்களையும் சந்தித்து இந்த ஆண்டே அனுமதி பெற தீர்மானித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கூட மத்திய அமைச்சரவையில் இடம்பெறாததால் மேகேதாட்டு திட்டத்தில் தமிழகத்துக்கு பின்னடைவு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள‌ சதானந்த கவுடா, “மேகேதாட்டு அணை கட்டுவதற்கான அனுமதி விரைவில் பெற்று தரப்படும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உதவியை பெற்றுத்தரவும், சட்டப்போராட்டம் நடத்தவும் நான் தயாராக இருக்கிறேன். கர்நாடகாவை சேர்ந்த 4 மத்திய அமைச்சர்களும், 25 பாஜக எம்பிக்களும் ஒற்றுமையாக செயல்படுவோம். கர்நாடகா பாஜகவை ஆதரிப்பதால், மத்திய அரசும் கர்நாடகாவை ஆதரிக்கும்''என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

சதானந்த கவுடாவின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சராக இருப்பவர் மாநில நலனை தவிர்த்து, நாட்டு நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். க‌ர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், “சதானந்த கவுடா உள்ளிட்டோரின் ஆதரவு எங்களுக்கு நம்பிக்கையை தருகிறது. அதேவேளையில் தமிழக அரசு மேகேதாட்டு திட்ட‌த்தை எதிர்க்கக் கூடாது. இந்த திட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கே அதிக நன்மைகள் ஏற்படும்'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x