யோகாவை மதிக்காத காங்கிரஸ் தேர்தலில் தோற்றது: பாபா ராம் தேவ் புதிய விளக்கம்

யோகாவை மதிக்காத காங்கிரஸ் தேர்தலில் தோற்றது: பாபா ராம் தேவ் புதிய விளக்கம்
Updated on
1 min read

முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் தனிப்பட்ட முறையில் யோகா செய்தார்கள், மதித்தார்கள், ஆனால், அவர்களின் வாரிசுகள் யோகாவை மதிக்காததால், காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றது, யோகா என்பது கடவுளால் நேரடியாக ஆசிர்வதிக்கப்படுவதாகும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் விளக்கம் அளித்துள்ளார்.

சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நான்டட் நகரில் நாளை நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பாபா ராம் தேவ் பங்கேற்கிறார். இதில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸும் பங்கேற்கிறார். இதற்காக மும்பைக்கு நேற்று வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது

முன்னாள் பிரதமர்களான ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் யோகாவை மதித்தார்கள், வெளியே சொல்லாவிட்டால்கூட ரகசியமாக யோகாவைச் செய்தார்கள். ஆனால், அவரின் வாரிசுகள் யோகாவை மதிக்கவில்லை. இந்த அவமதிப்பால்தான்,  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. யோகா  கலை என்பது கடவுளால் நேரடியாக ஆசீர்வதிக்கப்பட்டது.

ஆனால், சமானிய மக்களோடு ஒன்றாக அமர்ந்து யோகா செய்த முதல் பிரதமர், நரேந்திர மோடிதான். அதேபோல் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரும் யோகா செய்து வருகிறார்கள்.

பிரதமர்  மோடி, அமித் ஷா தலைமையில் கீழ், மகிப்பெரிய பணிகளாக அரசியலமைப்பு சட்டம் 370, 35ஏ ஆகிய விவகாரங்களில் புதிய திருப்பம் ஏற்படும்.  ஒரே தேசம் ஒரே சட்டம், ஒரே தேசம் ஒரே தேர்தல், முத்தலாக் மசோதா ஆகிய விவகாரங்களில் அரசு சிறப்பாகச் செயல்படும் என நம்புகிறேன்

யோகா என்பது அரசியல், சாதி, நம்பிக்கை, மதம்ஆகியவற்றைக்க கடந்தது. யோகா கலையை நாம் அனைவரும் தேசிய மதமாக ஏற்க வேண்டும்.

உணவுப் பொருள்களில் கலப்படத்தை தடுக்க தரக்கட்டுப்பாட்டு அமைப்புகள் வெளிப்படையாக செயல்பட வேண்டும். சீனா போன்ற நாடுகளில் கலப்படத்தைத் தடுக்க மரண தண்டனைகூட விதிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அத்தகைய கடுமையான சட்டங்கள் இல்லை. எனவே, குறைந்தபட்சம் தண்டனை விதிக்கும்  சட்டம் கொண்டு வர வேண்டும். நெய், மருந்துகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றில் கலப்படம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்

இவ்வாறு பாபா ராம் தேவ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in