

நீரா ராடியா ஒலிநாடா விவகா ரத்தை இரண்டு பிரிவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
தொழில் துறையினருக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் இடையே இடைத்தரகராக செயல் பட்டவர் நீரா ராடியா. அவரது உரையாடல்களின் ஒலிநாடா விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரு கிறது. உரையாடல்களை பதிவு செய்து வெளியிட்டதன் மூலம் தனது தனிப்பட்ட உரிமை மீறப் பட்டுள்ளது என்று டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து, ஜே.எஸ்.சவுகான், ஆர்.கே.அகர்வால் முன்பு செவ்வாய்க்கிழமை விசா ரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கில் சட்டமீறல் தனியாகவும், குற்றத்தன்மை தனியாகவும் விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதற்கு முன் தனியுரிமை மீறல் விவகாரம் விசாரிக்கப்படும். இந்த விஷயத்தை மீறி வாதிட அனுமதிக்க மாட்டோம். ஆகஸ்ட் 26 28 தேதிகளில் இதுகுறித்து விசாரிக்கப்படும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ் ஆஜரானார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ சார்பில் ‘சீல்’ வைக்கப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை நிலவர அறிக்கையை நாங்கள் உத்தரவிடும் வரை பிரிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.