Last Updated : 27 Jun, 2019 02:14 PM

 

Published : 27 Jun 2019 02:14 PM
Last Updated : 27 Jun 2019 02:14 PM

பசு குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால் 5ஆண்டுகள் சிறை: மத்தியப் பிரதேச அரசு முடிவு

பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபடும் பசு குண்டர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்தை மத்தியப் பிரதேச அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இதற்காக பசு வதை தடுப்புச்சட்டம் 2004-ல் திருத்தம் கொண்டுவர திட்டத்துக்கு மத்தியப் பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான கோப்புகளில் முதல்வர் கமல்நாத் நேற்று கையொப்பமிட்டுவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பாஜக ஆட்சிக்கு வந்தபின், பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சிலர் பசுக்களை விற்பனைக்குக் கொண்டுசெல்லும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்கின்றனர். கடந்த ஆண்டில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்தன.

இதைத் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டந்தோறும் சிறப்பு போலீஸ் அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க உச்ச நீதிமன்றம், அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் மத்தியப் பிரதேச அரசு கொண்டு வரும் சட்டத் திருத்தத்திற்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதை மாநில கால்நடைத்துறை அமைச்சர் லகான் சிங் யாதவ் உறுதி செய்துள்ளார்.

ஜூலை 8-ம் தேதி தொடங்கும் மழைக்கால சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இந்த திருத்தம் கொண்டுவரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சட்டத் திருத்தத்தின் படி, பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

மேலும், கும்பலாக வன்முறையில் ஈடுபட்டால் சிறை தண்டனை கூடுதலாக ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தொடர்ந்து இதேபோன்ற வன்முறையில் ஈடுபட்டால், தண்டனை இரட்டிப்பாக்கப்படும்.

மேலும், கும்பல் வன்முறையில் ஈடுபடுவோர் பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏதும் விளைவித்தால், அவர்களுக்கு ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x