சராசரியாக ஜிடிபியில் 7 முதல் 120 சதவீதம்: வெளிநாடுகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ.34 லட்சம் கோடி பதுக்கல்

சராசரியாக ஜிடிபியில் 7 முதல் 120 சதவீதம்: வெளிநாடுகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ.34 லட்சம் கோடி பதுக்கல்
Updated on
2 min read

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 1980 முதல் 2010-ம் ஆண்டுவரை இந்தியர்கள் பதுக்கிய கறுப்புப் பணம் குறித்த இறுதியான மதிப்பீட்டை உறுதி செய்தவது கடினம் என்றபோதிலும், சராசரியாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் (ஜிடிபி-மொத்த உள்நாட்டு உற்பத்தி) 10 சதவீதம் கடத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்த அறிக்கையின்படி ரூ.34 லட்சம் கோடியை இந்தியர்கள் கறுப்புப் பணமாக வைத்திருக்கலாம் என நாடாளுமன்ற நிதிக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியப் பொருளாதார ஆய்வுக் குழு (என்சிஏஇஆர்), தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (என்ஐஎஃப்எம்), தேசிய பொது நிதி மற்றம் கொள்கை நிறுவனம் (என்ஐபிஎஃப்பி) ஆகியவை சேர்ந்து ஆய்வு நடத்தி தகவல்களை நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் அளித்தன.

இந்தியா மற்றும் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம், சொத்து- ஆய்வு அறிக்கை என்ற தலைப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில்  கூறப்பட்டுள்ளதாவது:

''வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் இந்தியர்கள் பதுக்கிய கறுப்புப் பணம் மற்றும் சொத்துக்கள் குறித்த நம்பகத்தன்மையான மதிப்பீடு, உறுதியான மதிப்பீடு இல்லை என்று நாடாளுமன்ற நிதிக்குழு தெரிவித்துள்ளது.

வருவாய்த் துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே வெளியிட்ட அறிக்கையில், " கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துகளை மேக்ரோ அளவில் மதிப்பீடு செய்து கணக்கிடுவது என்பது மிகக்கடினம். இந்த 3 அறிக்கையின் அடிப்படையில் மதிப்பீடுவதும் கடினமாக இருக்கிறது.

ஏறக்குறைய நாட்டின் உள்நாட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் (ஜிடிபி) 7 சதவீதம் முதல் 120 சதவீதம் வரை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. சராசரியாக 10 சதவீதம் கடத்தப்பட்டுள்ளது.

தேசிய பொது நிதி மற்றம் கொள்கை நிறுவனம் (என்ஐபிஎஃப்பி) அறிக்கையின்படி, 1997 முதல் 2009-ம் ஆண்டுவரை இந்தியாவில் இருந்து 0.2 சதவீதம் முதல் 7.4 சதவீதம் ஜிடிபி வரை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

தேசியப் பொருளாதார ஆய்வுக் குழு அறிக்கையின்படி இந்தியாவில் இருந்து 1980-ம் ஆண்டில் இருந்து 2010-ம் ஆண்டுவரை 38,400 கோடி டாலர் முதல் 49,000 கோடி டாலர்கள் வரை சென்றிருக்கலாம் எனத் தெரிவிக்கிறது. இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.34 லட்சம் கோடியாகும்.

தேசியப் பொது நிதி மற்றம் கொள்கை நிறுவனம் அளித்த அறிக்கையில் , இந்தியாவில் இருந்து 1990 முதல் 2008-ம் ஆண்டுவரை ரூ.9 லட்சத்து 41 ஆயிரத்து 837 கோடி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட், சுரங்கம், மருந்துப் பொருள் தயாரிப்பு, பான் மசாலா, குட்கா, புகையிலை, வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம், வேளாண் பொருள்கள் வணிகம், திரைத்துறை, தனியார் கல்வித் துறை ஆகியவற்றில் இருந்துதான் அதிக அளவில் கறுப்புப் பணம் உருவாகியுள்ளது.

மேலும் பங்குச்சந்தை, தொழில்துறை உற்பத்தி ஆகியவற்றில் இருந்து கணக்கில் வராத பணம் உருவாகியுள்ளது. ஆனால், எவ்வாறு கறுப்புப் பணம் உருவாகிறது என்பதற்கான நம்பகத்தன்மையான தகவல் இல்லை. இந்தக் கணக்கீடுகள் அனைத்தும் உத்தேசமான அடிப்படையில்தான் கணக்கிடப்பட்டள்ளன. துல்லியமான கறுப்புப் பண அளவீடுகளைக் கூறுவது கடினமாகும்.

கறுப்புப் பணம் என்பது பல்வேறு வடிவங்களில் இருக்கிறது. பணமாகவும், வங்கியில் வைப்புத்தொகையாகவும், சொத்துகளாகவும், கண்ணுக்கு தெரியாத சொத்துகளாகவும் இருக்கிறது. கறுப்புச் சொத்துகளின் ஒரு பகுதிதான் கறுப்புப் பணம்.இது ரொக்கப் பணமாக இருக்கிறது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், உருவாவதைத் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் வருவாய்த் துறையும், கறுப்புப் பண உருவாக்கத்தைத் தடுக்க உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கறுப்புப் பணம் தொடர்பாக இதுவரை சிறப்பு புலனாய்வுக் குழு 7 அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in