Published : 11 Sep 2014 12:14 PM
Last Updated : 11 Sep 2014 12:14 PM

அபாரமாக பயிற்சியளிக்கிறார் பிளெட்சர்: ரவி சாஸ்திரி பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர் சிறப்பாக பயிற்சியளிக்கிறார் என்று இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இதன் மூலம் பயிற்சியாளர் பதவியில் இருந்து பிளெட்சர் நீக்கப்படுவாரா என்ற கேள்வியும் முடிவுக்கு வந்துள்ளது. இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளில் மோசமான தோல்வியடைந்ததை அடுத்து கேப்டன் தோனி மீதும் பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டுமென்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் பிசிசிஐ-யிடம் வலியுறுத்தினர்.

இதையடுத்து இந்திய அணியின் இயக்குநராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அவர் இந்திய அணியை ஒட்டுமொத்தமாக கண்காணிப்பார். அவர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிளெட்சரின் பயிற்சியாளர் பதவி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே உலகக் கோப்பை கிரிக்கெட் வரை பிளெட்சர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பார் என்று கேப்டன் தோனி கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ, தோனி கூறியது பிசிசிஐ-யின் கருத்து அல்ல, அவரது சொந்த கருத்து என்று தோனியின் பேச்சுக்கு தனது எதிர்ப்பை காட்டியது.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து டெஸ்ட் தோல்வியால் ஏற்பட்ட சர்ச்சைகளும், விமர்சனங்களும் முடிவுக்கு வந்தன. யாரை நீக்க வேண்டும், யாரை சேர்க்க வேண்டும் என்பதுபோன்ற எந்த கருத்துகளையும் முன்னாள் வீரர்கள் யாரும் வெளியிடவில்லை.

இந்நிலையில் கிரிக்இன்போ இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள ரவி சாஸ்திரி இது தொடர்பாக கூறியுள்ளது:

பிளெட்சர் மிகவும் உறுதியான உள்ளம் கொண்டவர். 100 டெஸ்ட் போட்டிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். இது மிகப்பெரிய விஷயம், அவரது பயிற்சியளிக்கும் திறனும் அபாரமாக உள்ளது. கிரிக்கெட்டில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும் அவர் வல்லவராக இருக்கிறார்.

1983-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இருந்தே எனக்கு பிளெட்சரை தெரியும். டெஸ்ட் போட்டியில் மோசமாக தோல்வியடைந்த பிறகு ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது மிகப்பெரிய சாதனை.

இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களுடனும் தனியாக பேசினேன். எனது அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். நான் கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தைவிட, அதற்கு பின்பு கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்த்துதான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

இந்திய வீரர்கள் திறமையானவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்ற அதே அணிதான் அடுத்த மூன்று டெஸ்ட்களிலும் மோசமாக தோற்றது. இந்திய அணி ஒரே வாரத்தில் மோசமான அணியாக மாறிவிட வாய்ப்பே இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருநாள் போட்டிக்காகவே நான் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டேன். அந்த பணி வெற்றிகரமாக முடிந்தது என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x