என்ஆர்ஐ தொழிலதிபர் தற்கொலை விவகாரம்; ரமேஷ் சென்னிதலா ஆவேசம்: கேரள சட்டப்பேரவை ஒத்திவைப்பு

என்ஆர்ஐ தொழிலதிபர் தற்கொலை விவகாரம்; ரமேஷ் சென்னிதலா ஆவேசம்: கேரள சட்டப்பேரவை ஒத்திவைப்பு
Updated on
2 min read

கேரளாவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் முதலீடு செய்தமைக்கு எந்தவிதமான அனுமதியும் கொடுக்காததால், தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், கேரள சட்டப்பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாஜன் பரயல்(வயது 49). இவர் நைஜீரியாவில் தொழில் செய்துவந்தார். சமீபத்தில் கேரளாவுக்கு வந்த சாஜன், தனது சொந்த நகரான கண்ணூரில் ரூ.16 கோடி முதலீட்டில் ஒரு கலாச்சார மையத்தைத் தொடங்கினார். ஆனால், அதற்கு அந்தூர் நகராட்சி அனுமதி அளிக்காததால், மனமுடைந்த சாஜன், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலதிபர் சாஜன் கட்டிய கலாச்சார மையத்துக்கு அந்தூர் நகராட்சியின் தலைவர் பி.கே. ஷியாமளா அனுமதி  அளிக்கவில்லை. தனது கணவர் சாஜன் தற்கொலைக்கு ஷியாமளாதான் காரணம் என்று சாஜனின் மனைவி பீனா குற்றம் சாட்டினார். இதில் ஷியாமளாவின் கணவர் கோவிந்தன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

வெளிநாடு வாழ் இந்தியர் சாஜன் தற்கொலை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் அவமானம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. மாநிலத்துக்குள் வரும் எந்த தொழிலதிபரையும், தொழிற்சாலையையும் காப்பாற்ற முடியவில்லை, தக்கவைக்க முடியவில்லை. இந்தத் தற்கொலைக்குக் காரணமான ஷியாமளாவையும் கைது செய்ய அரசு மறுக்கிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் இன்று சட்டப்பேரவை கூடியதும் எதிரொலித்தது. எதிர்க்கட்சி உறுப்பினர் கே.எம்.சாஜி, இந்த விவகாரத்தை எழுப்பி இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது, எழுந்து முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், " மாநிலத்தில் எளிதாகத் தொழில் செய்வது குறித்து சில விஷயங்களை அறிவித்துவிட்டோம். அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க செயலாளர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளோம். இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காது. இத்தற்கொலை குறித்து விசாரணை முடிந்த பின் உண்மை நிலவரம் தெரியும். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா எழுந்து பேசுகையில் "கன்னூரில் வழிவழியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோஷ்டிப் பூசல் இருப்பதால்தான் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. நீங்கள் 20 நிமிடங்கள் பேசினீர்கள். ஆனால், ஒருவார்த்தை கூட ஷியாமளா பழிவாங்கும் செயல்பாடு குறித்துப் பேசவில்லை. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் படுகொலை.

இந்த தற்கொலையால், எனக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இதுதான் கேரள அரசு வெளிநாட்டுத் தொழிலதிபர்களை அழைக்கும் லட்சணமா. ஷியாமளா மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அதிகாரிகளை பலிகடாஆக்கி இருக்கிறீர்கள்" என்று ஆவேசமாகப் பேசினார்.

இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகரைச் சுற்றி அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அவையில் இருந்து எழுந்து சென்றார். மீண்டும் சிறிதுநேரத்தில் கூடியபோது அப்போதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in