

உத்திரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டதை வீடியோ எடுத்த பத்திரிகையாளரை ரயில்வே போலீஸார் அடித்து உதைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் திமன்புரா என்ற பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு நின்றது. இந்த தகவல் தெரியவந்ததை தொடர்ந்து உள்ளூர் பத்திரிகையாளரான அமித் வர்மா என்பவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார். ஆனால் பாதுகாப்புக்காக அங்கு நின்றிருந்த ரயில்வே போலீஸார் அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மோதல் முற்றிய நிலையில் அமித் சர்மாவை சரமாரியாக அவர்கள் தாக்கினர். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
அதுபற்றி அமித் சர்மா கூறுகையில் ‘‘போலீஸ் உடையில் அவர்கள் இல்லாததால் நான் விவரம் கேட்டேன். அவர்களில் ஒருவர் எனது கேமராவை தள்ளிவிட்டார், அதனை நான் எடுக்க முயன்ற போது என்னை கடுமையாக தாக்கினர்‘‘ என்றார்.
இதனை தொடர்ந்து ரயில்வே காவல் நிலையத்திக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமித் சர்மா, இரவு முழுவதும் அங்கே வைக்கப்பட்டார். விவரம் அறிந்து சக பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக, ரயில் போலீஸார் ராகேஷ் குமார், சஞ்சய் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.