சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகளாக மின்வசதி பெறாத இந்திய கிராமம்: பாம்பு, பூரான்களுக்கு அஞ்சும் மக்கள்

சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகளாக மின்வசதி பெறாத இந்திய கிராமம்: பாம்பு, பூரான்களுக்கு அஞ்சும் மக்கள்
Updated on
1 min read

நாடு சுதந்திரம் அடைந்து, சுற்று வட்டாரங்களில் மின்சார இணைப்புகள் வந்தபோதும் கடந்த 7 பத்தாண்டுகளாக இன்னமும் மின் வசதிபெறாமல் இருளில் தள்ளப்பட்டுள்ளது சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம்.

பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ளது திரிசூலி. 100 வீடுகள் மட்டுமே கொண்ட கிராமம் இது. இங்கு மின் வசதி கோரி மாவட்ட ஆட்சியருக்கு உள்ளூர்வாசிகள் நிறைய மனுக்களை எழுதிவிட்டனர்.

இதுகுறித்து 70 வயதான உள்ளூர்வாசி ஒருவர் பேசுகையில், ''நான் பிறந்ததிலிருந்தே இந்த கிராமத்தில் மின்சாரத்தை பார்த்ததில்லை. தேர்தலின்போது தலைவர்கள் வருகிறார்கள். ஆனால் இங்கு எந்த வளர்ச்சியையும் அவர்கள் ஏற்படுத்தித் தர முன்வந்ததில்லை'' என்றார்.

சுக்பி எனும் பெண்மணி ஒருவர் தனது வேதனையை ஏஎன்ஐயிடம் பகிர்ந்துகொண்டபோது, ''மின்வெளிச்சம் இல்லாதததால் இரவு வேளைகளில் தேள், பாம்பு, பூரான்களுக்கு அனைவரும் அஞ்சுகின்றனர்'' என்று தெரிவித்தார்.

கிராமத்தில் உள்ள குழந்தைகள் லாந்தர் விளக்குகளின் வெளிச்சத்தில் படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுகுறித்து பேசிய ராமேஷ்வர் பால் என்பவர் பேசும்போது, ''குழந்தைகள் லாந்தர் விளக்குகளின் ஒளியில் படிப்பதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதற்காக, இப்பகுதியில் மண்ணெண்ணெய் போதுமான அளவிற்கு வழங்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்கள் ஒளிக்கு மரக்கிளைகள், சுள்ளிகளை எரிக்கின்றனர்'' என்றார்.

முன்னதாக, பல்ராம்பூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ளவர்கள் இப்பகுதியில் கடுமையான நீர் பற்றாக்குறை பற்றி புகார் செய்தனர். இங்கே உள்ள மக்கள் ஒரு குளத்தில் இருந்து தண்ணீர் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனராம்.

இக்குளம்தான் இப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது, அதன் விளைவாக மாசு ஏற்படவும் நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தங்கள் கிராமத்தின் மோசமான நிலையைப் பற்றி தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in