Published : 15 Jun 2019 02:23 PM
Last Updated : 15 Jun 2019 02:23 PM

கேரளாவில் காணாமல் போன போலீஸ் இன்ஸ்பெக்டர் கரூரில் கண்டுபிடிப்பு: உயரதிகாரிகள் துன்புறுத்தல் என புகார்

கேரளாவில் உயரதிகாரிகளின் துன்புறுத்தலால் காணாமல் போனதாக கூறப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், இரண்டு நாட்கள் பரபரப்புக்கு பிறகு கரூர் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.

கேரள மாநிலம் கொச்சி மத்திய காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் நவாஸ். கடந்த வியாழனன்று உயரதிகாரிகள் சிலருடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய நவாஸ், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தான் நலமுடன் இருப்பதாக கூறி மனைவி ஆரீபாவுக்கு  குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

தனது காவல் நிலைய போலீஸாரிடம் நீதிமன்ற வழக்கு தொடர்பாக வெளியூருக்கு செல்வதாக கூறியுள்ளார். இதன் பிறகு யாரும் நவாஸை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அவரது மனைவி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். மேலும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் கடிதம் அனுப்பினார்.

இதுகுறித்து  ஆரீபா கூறுகையில் ‘‘எனது கணவர் நேர்மையாக செயல்பட்டார். இதனை பிடிக்காத சில உயரதிகாரிகள் அவருக்கு அலுவல் ரீதியாக தொந்தரவு கொடுத்தனர். பணத்துக்காக சிலர் மீது தவறான முறையில் வழக்கு பதிவு செய்யுமாறு உயரதிகாரிகள் எனது கணவரை வற்புறுத்தினர்.

இதனால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். நான், வெளியூர் செல்கிறேன், தேட வேண்டாம் என எனக்கு குறுஞ் செய்தி மட்டும் அனுப்பி உள்ளார். அவர், மாயமானதற்கு உயர் அதிகாரிகளின் கொடுமையே காரணம்’’ எனக் கூறினார்.

போலீஸ் அதிகாரி ஒருவர் காணாமல் போன விவகாரம் கேரளாவில் கடந் 2 நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கேரள டிஜிபி பெஹரா உத்தரவின் பேரில் போலீசார் நவாஸை தேட போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கேரளாவில் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதனிடையே நவாஸ் கொல்லத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக கோவை செல்லும் பயணிகள் ரெயிலில் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து நவாசின் புகைப்படம் தமிழக ரயில்வே போலீஸூக்கு அனுப்பப்பட்டது. கரூர் ரயில் நிலையத்தில் நவாஸ் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை அழைத்துச் செல்ல கேரள போலீஸார் கரூர் விரைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x