தேர்தல் வெற்றிக்குப்பின் முதல் வெளிநாட்டுப் பயணம்: பிரதமர் மோடி மாலத்தீவு, இலங்கை செல்கிறார்

தேர்தல் வெற்றிக்குப்பின் முதல் வெளிநாட்டுப் பயணம்: பிரதமர் மோடி மாலத்தீவு, இலங்கை செல்கிறார்
Updated on
1 min read

2வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றபின் முதல்முறையாக மாலத்தீவுக்கு இன்று புறப்படுகிறார்.

இந்தியா எப்போதும் அண்டை நாடுகள்தான் முக்கியம் என்ற கொள்கையின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி முதலில் இன்று மாலத்தீவுக்கு முதலில் பயணம் மேற்கொள்கிறார், அதன்பின் நாளை(ஞாயிற்றுக்கிழமை) அங்கிருந்து இலங்கைக்குப் புறப்படுகிறார்.

பிரதமர் மோடி மாலத்தீவுக்குச் செல்லும்போது அந்நாட்டு அரசு மோடிக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த நிஷானிஜுதீன் விருது வழங்கி கவுரவிக்கிறது.

இரு நாடுகளின் பயணம் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘என்னுடைய மாலத்தீவு மற்றும் இலங்கை பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை நெருக்கமடையச் செய்யும், நட்புறவுகளை மேம்படுத்தும் என்று நம்புகிறேன. அண்டை நாடுகள்தான் முதலில் முக்கியம் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படும்" எனத் தெரிவித்தார்.

இதற்கு முன் கடந்த நவம்பர் மாதம் மாலத்தீவுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் இர்பாஹிம் சோலிஹ் பதவி ஏற்புவிழாவில் பங்கேற்றார். அதிபர் அப்துல்லா யாமீன் அவசரநிலையை மாலத்தீவில் கொண்டுவந்தபின், இந்தியா, மாலத்தீவு இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால், சோலிஹ் அதிபரானபின் மீண்டும் மலரத் தொடங்கியுள்ளது.

இன்று மாலத்தீவு செல்லும்  பிரதமர் மோடி, அநாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றுகிறார். கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி இதுவரை பூடான், ஆஸ்திரேலியா, பிஜி, மொரிஷியஸ், இலங்கை, மங்கோலியா, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, உகாண்டா ஆகிய 10 நாடுகளின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

மேலும் மாலத்தீவு மற்றும் இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம், மாலத்தீவு மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை கையொப்பம் ஆகலாம் எனத் தெரிகிறது. பிரதமர் மோடியும், மாலத்தீவு அதிபரும் இணைந்து பாதுகாப்பு தொடர்பான இரு திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர்

மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு நாளை இலங்கைக்கு  பிரதமர் மோடி செல்கிறார். அங்கு அதிபர் சிறிசேனா அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கிறார்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 250க்கும்மேற்பட்டோர் கொல்லப்பட்டபின் அந்நாட்டுக்கு செல்லும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு பிரதமர் மோடி மூன்றாவது முறையாகச் செல்கிறார். இதற்கு முன் 2015, 2017 ம் ஆண்டுகளில் சென்றுள்ளார்.

பிரதமர் மோடி குறித்து அதிபர் சிறிசேனா அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், " இந்தியப் பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை இலங்கை தலைநகர் கொழும்பு நகருக்கு வருகிறார். மாலத்தீவுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்தவாறே இலங்கைக்க வந்து சிலமணிநேரங்கள் நம் நாட்டில் செலவிடுகிறார். " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நாளை காலை 11. மணிக்குச் செல்லும் பிரதமர் மோடிக்கு அதிபர் சிறிசேனா மதிய விருந்து அளிக்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் செய்யப்பட்டு, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in