பாலியல் வன்முறையைவிட மோசமானது குழந்தை திருமணம்: வரதட்சணை வழக்கில் டெல்லி நீதிமன்றம் கருத்து

பாலியல் வன்முறையைவிட மோசமானது குழந்தை திருமணம்: வரதட்சணை வழக்கில் டெல்லி நீதிமன்றம் கருத்து
Updated on
1 min read

குழந்தைத் திருமணம் பாலியல் வன்முறையைவிட மோசமானது என்று தெரிவித்துள்ள டெல்லி நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது சிறுமிக்கு வயது 14. திருமணத்தின்போது வரதட்சணையாக ரூ.3.52 லட்சம் வழங்கப்பட்டது. கணவன் வீட்டில் கூடுதலாக கார் மற்றும் ரூ.50,000 ரொக்கம் கேட்டதால் பிரச்சினை எழுந்தது. வரதட்சணை தராததால், பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன்பேரில், கணவன் மற்றும் அவரது பெற்றோர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவானி சவுகான் முன்பு விசாரணைக்கு வந்தது. குறைந்த வயதில் திருமணம் செய்துவைத்த பெற்றோரை கண்டித்த நீதிபதி, ‘குழந்தை திருமணம் என்பது பாலியல் வன்முறையைவிட கொடுமையானது. குடும்ப வன்முறையிலேயே அதிகபட்ச வன்முறை குழந்தை திருமணம்தான்’ என்று தெரிவித்தார்.

பெண்ணின் பெற்றோர் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி, டெல்லி தெற்கு காவல்துறை துணை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார். கணவர் வீட்டார் மீது வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, வரும் 19-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதம் ரூ.4,000 இடைக்கால ஜீவனாம்சம் வழங்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இருதரப்பினரும் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த வழக்கை சமரச மையத் துக்கு அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in