

கடந்த பிப்ரவரி 14ல் தாக்குதல் நடத்திய காஷ்மீரின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் மீண்டும் வாலாட்டத் தொடங்கியுள்ளது. இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற ஜெய்ஷ் இ முகமதுதீவிரவாதிகள் 4 பேர் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்த விவரம்:
தெற்குக் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த பஞ்சரான் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக நேற்று மாலை தகவல் கிடைத்தது.அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுண்டரில் உயிரிழந்த தீவிரவாதிகள் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று மாலை தொடங்கிய தேடுதல் வேட்டை தற்போது முடிவடைந்ததுள்ளது.
இவ்வாறு காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.
ஜெய்ஷ் இ முகமது இந்திய ராணுவமும்
கடந்த பிப்ரவரி 14 அன்று ஸ்ரீநகரில் துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதன்பின்னர் இந்திய ராணுவம், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட இயங்கும் தீவிரவாதக் குழு, ஜெய்ஷ்-இ-முகமது (ஜீஎம்),வை பழிவாங்க நேரம்பார்த்தது.
பிப்ரவரி 26 அன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டை தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.