Published : 21 Jun 2019 03:24 PM
Last Updated : 21 Jun 2019 03:24 PM

முத்தலாக் சட்டம் மக்களவையில் தாக்கல்: காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சிகள் கடும் எதிர்ப்பு

காங்கிரஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கிடையே முத்தலாக் சட்டம் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள முத்தலாக் மசோதாவுக்கு முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) மசோதா, 2019 என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 16-வது மக்களவையின் போது முத்தலாக் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு போதுமான பலம் இல்லாத காரணத்தால், அது நிறைவேற்றப்படவில்லை. இதனால், 16-வது மக்களவை முடிந்த நிலையில், அந்த  முத்தலாக் மசோதாவும் மாநிலங்களவையில் காலாவதியாகிவிட்டது.

இந்நிலையில், முத்தலாக் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்த நிலையில், அதைச் சட்டமாக்கும் முயற்சியில் இன்று முத்தலாக் மசோதா  மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி, முஸ்லிம் பெண்களுக்கு உடனடியாக தலாக் கூறி அவர்களை ஒதுக்கி வைப்பது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முத்தலாக்கைப் பின்பற்றும் கணவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கணவனைக் கைது செய்யும் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் கணவன் கைது செய்யப்பட்டால், மாஜிஸ்திரேட் முன் மனைவி ஒப்புதலின் பெயரில் ஜாமீன் பெற முடியும்.

மக்களவையில் அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் அனைத்து மக்களையும் அரசு சமமாக நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. பெண்களை பாதுகாக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது ஏற்க்கத்தக்கது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் அரசு குறி வைப்பது ஏன்?’’ என கேள்வி எழுப்பினார்.

இதன் பிறகு பேசிய ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேதுல் முஸ்லிமீன்’ (ஏஐஎம்ஐஎம்) கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, இந்த சட்டம் முஸ்லிம் பெண்களை பாதுகாப்பதற்கு பதிலாக தண்டிக்கவே வகை செய்யும் கணவர் 3 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டு விட்டால் அந்த முஸ்லிம் பெண் பாதிக்கபட மாட்டாரா. பெண்களின் பாதுகாப்பாக்காக ஏற்கெனவே பல சட்டங்கள் உள்ளன. முஸ்லிம் திருமணச்  சட்டமும் உள்ள நிலையில் இந்த சட்டத்துக்கு என்ன அவசியம்’’ என கேள்வி எழுப்பினார்.  

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஒவ்வொரு தரப்பினரையும் பாதுகாக்கவே நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றுகிறது. இந்த சட்டத்தை வைத்து எந்த சமூகத்தையும் அரசு குறி வைக்கவில்லை. சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பது என்பது நீதிமன்றம். இது அரசின் கையில் இல்லை. எனவே குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக ஒரு சட்டம் இருப்பதாக கூறப்படுவது தவறான குற்றச்சாட்டு’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x