Published : 15 Jun 2019 12:37 PM
Last Updated : 15 Jun 2019 12:37 PM

பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தார் முதல்வர் பழனிசாமி: நிலுவைத் தொகை, திட்டங்கள் குறித்து மனு

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். நிலுவைத் தொகை, திட்டங்கள் தொடர்பாக அவர் மனு அளித்தார்.

நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி, உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காகமிழக முதல்வர் பழனிசாமி நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். டெல்லியில் முதல்வரை தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலரையும் சந்தித்து தமிழக திட்டங்கள் தொடர்பாக பேச திட்டமிட்டு இருந்தார்.

அதன்படி, டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தார்.

மிகக் குறுகிய நேரமே நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழகம் சந்தித்து வரும் வறட்சி, காவிரி நீர் பிரச்னை உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி எடுத்துரைத்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, அமித் ஷா ஆகியோரையும் முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x