Published : 20 Jun 2019 04:59 PM
Last Updated : 20 Jun 2019 04:59 PM

மேற்குவங்கத்தில் இருதரப்பு மோதல்: துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

மேற்குவங்க மாநிலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது.

தேர்தலில் இருந்தே இருகட்சி தொண்டர்களிடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகிறன. 24 பர்கானா மாவட்டம் கந்தேஷ்காளி என்ற இடத்தில் பாஜக கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

தேர்தலுக்கு பின் அங்கு தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தொண்டர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து தொடர்ந்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். கடந்த சில தினங்களாக போராட்டம் ஓய்ந்து இருந்தது.

இந்தநிலையில், கொல்கத்தாவில் இன்று இருகட்சியினர் இடையே மீண்டும் கலவரம் வெடித்தது. இருதரப்பினரும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்து தடியடி நடத்தினர். எனினும் கூட்டம் கலைந்து செல்லாததால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் ராம் சாஹூ என தெரிய வந்துள்ளது. அவர் சாலையோரத்தில் பானிபூரி கடை நடத்தி வந்துள்ளார். உயிரிழந்த மற்றொருவர் குறித்த தகவல் வெளியாகவில்லை. துப்பாக்கிச்சூட்டில் மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக துணைத்  தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியதாவது:

‘‘மக்களவை தேர்தலுக்கு பிறகு மம்தா பானர்ஜிக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், மம்தா பானர்ஜியும் திட்டமிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. பாஜக நிர்வாகிகள் உடனடியாக அங்கு சென்று ஆய்வு செய்வார்கள். இதுபற்றிய விசாரணை அறிக்கையை பாஜக தலைமையிடம் சமர்பிப்போம்’’ எனக் கூறினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x