Published : 13 Jun 2019 04:53 PM
Last Updated : 13 Jun 2019 04:53 PM

மருத்துவ கவுன்சிலை கலைக்கும் ‘இந்திய மருத்துவக் கழகம் (திருத்தம்) சட்டவரைவு -2019’-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைக்கும் சட்டமான ‘இந்திய மருத்துவக் கழகம் (திருத்தம்) சட்டவரைவு -2019’ வரவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு வருமாறு:

“மத்திய அமைச்சரவை, இந்திய மருத்துவக் கழகம் (திருத்தம்) இரண்டாவது அவசரச் சட்டத்திற்கு பதிலாக, இந்திய மருத்துவக் கழகம் (திருத்தம்) சட்டவரைவு - 2019-க்கு ஒப்புதல் அளித்தது. இந்த சட்டவரைவு எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்நடவடிக்கை, நாட்டில் மருத்துவக் கல்வி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் தரத்தினை உறுதி செய்யும்.

தாக்கம் :

· இந்த புதிய சட்டவரைவு கடந்த ஆண்டு செப்டம்பர் 2018 முதல் இந்திய மருத்துவக் கழகத்தை 2 ஆண்டுகளுக்கு கலைத்திட வழிவகுக்கிறது.

· இக்காலக்கட்டத்தில், இந்திய மருத்துவக் கழகச் சட்டம், 1956-ல் அளிக்கப்பட்ட அதிகாரம் மற்றும் செயல்களை ஆளுநர்கள் குழு மேற்கொள்ளும்.

· தற்போது 7 ஆக உள்ள ஆளுநர்கள் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை, 12 ஆக உயரும்.

பின்னணி:

இந்திய மருத்துவக் கழகச் சட்டம், 1956-ன் கீழான பிரிவுகள் மற்றும் அதன்படி ஏற்படுத்தப்பட்ட வரையறைகளுக்குப் புறம்பாக இந்திய மருத்துவக் கழகம் சில தன்னிச்சையான செயல்களை மேற்கொண்டது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்தது.

மேலும், இந்திய மருத்துவக் கழகத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழு அதன் உத்தரவுகளை நிறைவேற்றாதததை சுட்டிக் காட்டியதுடன், மேற்பார்வைக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இத்தகைய நடவடிக்கைளின் காரணமாகவும் இந்திய மருத்துவக் கழகத்திற்கு மாற்றான முறையை அமைத்து அதன் மூலம் நாட்டில் மருத்துவக் கல்வி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் தரத்தினை உறுதி செய்வதற்காகவும், 26.09.2018 அன்று பிறப்பிக்கப்பட்ட இந்திய மருத்துவக் கழகம் (திருத்தம்) அவசரச் சட்டம், 2018-ன் மூலம் இந்திய மருத்துவக் கழகத்தை கலைத்திடவும், அதன் விவகாரங்களை முன்னணி மருத்துவர்கள் அடங்கிய ஆளுநர்கள் குழுவிடம் (பீ.ஓ.ஜி.) ஒப்படைத்திடவும் முடிவு செய்யப்பட்டது.

நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால் தலைமையிலான மற்றும் 6 இதர உறுப்பினர்களைக் கொண்ட ஆளுநர்கள் குழு அமைக்கப்பட்டது.

சட்டமன்ற செயல்முறை: அதனைத் தொடர்ந்து, மேற்படி அவசரச் சட்டத்திற்கு பதிலாக இந்திய மருத்துவக் கழகம் (திருத்தம்) சட்டவரைவு – 2018  கடந்த ஆண்டு டிசம்பர் 14 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, 31 டிசம்பர் 2018 அன்று நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும், அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், 2018 நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரில் இந்த சட்டவரைவு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டும் நிறைவேற்றப்பட இயலாமல் போனதுடன், 2019, ஜனவரி 9 அன்று அவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, இந்திய மருத்துவக் கழகம் கலைக்கப்பட்டு, மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தின் அதிகாரத்தை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் குழு தொடர்ந்து செயல்படுவதற்கும், முந்தைய அவசரச் சட்டப் பிரிவுகளின்படி ஆளுநர்கள் குழு மேற்கொண்ட பணிகளை அங்கீகரிக்கவும் , தொடர்ந்து செயலாற்றும் வகையிலும், இந்திய மருத்துவக் கழகம் (திருத்தம்) அவசரச் சட்டம், 2019 என்ற புதிய அவசரச் சட்டத்தை பிறப்பித்திட முடிவெடுக்கப்பட்டது.

2019 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மாநிலங்களவையால் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத, மக்களவையால் நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவக் கழகம் (திருத்தம்) சட்டவரைவு – 2018-க்குப் பதிலாக இந்திய மருத்துவக் கழகம் (திருத்தம்) இரண்டாவது அவசரச் சட்டம்- 2019 , கடந்த பிப்ரவரி 21-ம் தேதி அன்று பிறப்பிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நிலுவையாக இருந்த இந்திய மருத்துவக் கழகம் (திருத்தம்) சட்டவரைவு - 2018, 16-வது மக்களவை கலைக்கப்பட்டவுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி, நாடாளுமன்ற சட்டத்தின் மூலமாக இந்திய மருத்துவக் கழகம் (திருத்தம்) இரண்டாம் அவசரச் சட்டம், 2019-க்கு பதிலாக புதிய சட்டவரைவான இந்திய மருத்துவக் கழகம் (திருத்தம்) சட்டவரைவு - 2019- ஐ எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது கொண்டு வருவதற்கான முன்மொழிவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x