Last Updated : 09 Jun, 2019 01:25 PM

 

Published : 09 Jun 2019 01:25 PM
Last Updated : 09 Jun 2019 01:25 PM

செவிலியர் ராஜம்மாவுடன் ராகுல் காந்தி சந்திப்பு: தான் பிறந்தபோது உடனிருந்து கவனித்த செவிலியருடன் நெகிழ்ச்சி  

டெல்லி மருத்துவமனையில் தான் பிறந்தபோது குழந்தையாகிய தன்னை கைகிளில் ஏந்திய கேரள செவிலியர் ராஜம்மா வவாதில்லை இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.

ராகுல் காந்தியைச் சந்தித்தவுடன் 72 வயதான செவிலியர் ராஜம்மா மகிழ்ச்சி தாங்க முடியாமல், கட்டி அணைத்து கண்ணீர் விட்டது நெகிழ்ச்சியாக இருந்தது. ராகுல் காந்தியும் ராஜம்மா கைகளைப் பற்றி, தனது நன்றியைத் தெரிவித்தார்.

ராகுல் காந்தி இந்தியக்குடிமகன் இல்லை என்ற சர்ச்சை எழுந்தபோது, ராஜம்மா தான் குரல் கொடுத்து, ராகுல் காந்தி டெல்லி மருத்துவமனையில் பிறந்தவர், முதல்ஆளாக ராகுலை குழந்தையாக தானே கைகளில் ஏந்தினேன் என்று பேட்டி அளித்தார். அத்துடன் அந்த சர்ச்சை ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிட்டு வென்ற வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் 3 நாட்கள் பயணமாக கேரளாவுக்கு ராகுல் காந்தி சென்றுள்ளார். கடந்த இரு நாட்களாக மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மக்களைச் சந்தித்து ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார்.

ராகுல் காந்தி டெல்லி மருத்துவமனையில் பிறந்தபோது, அவரை கைகளில் ஏந்தி கொஞ்சியை செவிலியர் ராஜம்மா வவாதில், ராகுல் காந்தியைச் சந்திக்க விரும்பினார். அதன்பேரில் கோழிக்கோடு நகரில் ராகுல் காந்தி தங்கி இருக்கும்  விருந்தினர் இல்லத்துக்கு செவிலியர் வவாதில், அவரின் குடும்பத்தினர் இன்று காலை வந்தனர்.

அவர்கள் சிறிதுநேரம் காத்திருந்த நிலையில், ராகுல் காந்தி செவிலியர் வவாதில் குடும்பத்தினரைச் சந்தித்தார். ராகுல் காந்தியை குழந்தையாக கைகளில் எந்திய நிலையில், பெரிய மனிதராக உருவெடுத்து, வயநாடு தொகுதிக்கு எம்.பியாக வந்திருப்பதை பார்த்து ராஜம்மா கண்ணீர் விட்டு அழுதார்.

ராகுல்காந்தியை கட்டி அணைத்துக் கொண்டார், ராகுல் காந்தியும் ராஜம்மாவின் கைகளைப்பற்றிக்கொண்டார். சிறிது நேரம் ராகுல் காந்தியுடன் பேசிக்கொண்டிருந்த ராஜம்மா, சிறுவயதில் எப்படி இருந்தார், எவ்வாறு கைகளில் ஏந்தினேன், பிறந்தபோது யாரெல்லாம் மருத்துவமனையில் இருந்தார்கள் என்பதை கூறினார். அதன்பின் ராஜம்மா தனது குடும்பத்தினர் அனைவரையும் ராகுல் காந்திக்கு அறிமுகம் செய்துவைத்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ராகுல் காந்தியைச் சந்தித்துவிட்டு செல்லும்போது ராகுல் காந்திக்காக பிரத்யேகமாக வீட்டில் செய்யப்பட்ட பலாப்பழசிப்ஸ்,  இனிப்பு வகைகளை ராஜம்மா வழங்கினார். இதை மகிழ்ச்சியுடந் ராகுல் காந்தி பெற்றுக்கொண்டார். அடுத்த முறை கேரளா வரும்போது ராஜம்மாவை சந்திப்பதாக ராகுல் காந்தி உறுதியளித்தார்.

இந்த சந்திப்பு குறித்து ராஜம்மா நிருபர்களிடம் கூறுகையில், " கடந்த 1970-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி டெல்லி ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் ராகுல் காந்தி பிறந்தார். அந்த மருத்துவமனையில் அப்போது நான் பயிற்சி செவிலியராக இருந்தேன்.ராகுல் காந்தி பிறந்தவுடன் அவரை நானே கைகளில் ஏந்தி வெளியே கொண்டுவந்தேன். இப்போது ராகுல் காந்தியை நேரில் சந்தித்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. ராகுலுக்கு ஏதேனும் பரிசு அளிக்க விரும்பினேன். அதனால் என் கையால் சமைக்கப்பட்ட இனிப்புவகைகள், பலாப்பழம் சிப்ஸ் ஆகியவற்றை ராகுலுக்கு வழங்கினேன். அதை ராகுல் அன்புடன் பெற்றுக்கொண்டார்.

இந்திரா காந்தியின் பேரனை நான் என் கைகளால் ஏந்தியது எனக்கு ஏக மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x