

மோடி ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பாதுகாப்பாகவே இருப்பதாக பாபர் மசூதி பிரச்சினையில் வழக்கு தொடர்ந்தவர்களில் முக்கிய நபரான இக்பால் அன்சாரி கூறியுள்ளார்.
முன்னதாக, ஹைதராபாத்தில் மக்கா மசூதியில் பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் ஓவைஸி, "மோடியால் கோயிலுக்குச் செல்ல முடியும் என்றால்; நம்மால் மசூதிக்கு செல்ல முடியும். மோடி ஒரு குகையில் தியானம் செய்வார் என்றால்; நம்மால் நமது மசூதியில் பெருமிதத்துடன் தொழுகை செய்ய முடியும்.
300 சீட்களுக்கு மேல் நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வது என்பது பெரிய விஷயம்தான். ஆனால், இந்தியாவில் அரசியல் சாசனம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதனால் பாஜகவின் 300 சீட்களால் நமது உரிமைகளைப் பறிக்க இயலாது" எனக் கூறியிருந்தார்.
இது சர்ச்சையையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஓவைஸியின் கருத்துக்கு சிறுபான்மைத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நாக்வி கண்டனம் தெரிவித்துள்ளார். அதே போல், அயோத்தி கோயில் பூசாரியும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இச்சர்ச்சை தொடர்பாக, கருத்து தெரிவித்த இக்பால் அன்சாரி, "ஓவைஸி சொன்னது ஒருவகையில் சரிதான். மோடி ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பாதுகாப்பாகவே உணர்கின்றனர். அவர்களால் அவர்களது மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற முடிகிறது.
முஸ்லிம்களும் ஆளும் பாஜகவுடன் பூரண இணக்கத்தில் உள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ்தான் முஸ்லிம்கள் மனங்களில் அச்ச உணர்வைப் பரப்ப முயல்கிறது.
பாஜக முஸ்லிம்களுக்கு ஆதரவாக உள்ளது. முஸ்லிம்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளோம். ஏன், எல்லா மதத்தைச் சேர்ந்த மக்களும் பாஜக பக்கமே நிற்கின்றனர். பாஜக இத்தனை பெரிய பெரும்பான்மையைப் பெறும் என யாருமே எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்.
முஸ்லிம் மக்களாகிய நாங்கள் தேசத்துக்காக உழைக்கவே விரும்புகிறோம். எந்த சூழலிலும் தேசத்துக்கு துரோகமோ இழுக்கோ ஏற்படுத்த மாட்டோம்" என்றார்.
இதே கருத்தை அயோத்தி ராமர் கோயில் பூசாரி சத்யேந்திர தாஸும் கூறியிருக்கிறார். "எங்களுக்கு எதிரானவர்கள் சிலர் மோடி ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் சிரமப்படுவார்கள் என்று புரளியைக் கிளப்பியுள்ளனர். இது நிச்சயமாக நடக்காது. நமது பிரதமருக்கு ஒவ்வொரு குடிமகனுமே இந்தியன். இந்தியர்கள் எவருக்கும் எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை இருக்கிரது" என்றார்.