

பீகாரில் மூளை அழற்சிநோய் பாதிப்பினால் 122 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, மாநிலத்தில் லிச்சிப் பழ விளைச்சலைத் தடுக்க சதித்திட்டம் தீட்டப்படுவதாக மாநில வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பீகாரில் கடந்த சில மாதங்களாக மூளைஅழற்சி நோய் பரவியதால் குழந்தைகளின் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்று காலை வரை 122 ஆக அதிகரித்துள்ளது.
குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கு காரணம் அம்மாநிலத்தில் பெருமளவில் பயிரிடப்படும் லிச்சிப் பழங்கள் காரணம் என ஒரு செய்தி உலவத் தொடங்கியது.
இந்நிலையில் மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் பிரேம்குமார் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஏஎன்ஐயிடம் இன்று பேசுகையில், ''மூளை அழற்சி நோய் பாதிப்பில் குழந்தைகள் உயிரிழந்ததற்கு லிச்சிப்பழங்கள்தான் காரணமா அல்லது லிச்சிப்பழங்களுக்கும் முசாஃபர்பூர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லையா என்பதை கண்டறிய உரிய நிபுணர்களின் குழு ஒன்று அமைத்துள்ளோம். அவர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.
லிச்சிப்பழங்கள் மக்கள் நீண்ட நாட்களாகவே பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இப்போது மட்டும் இது அனைவருக்கும் ஒரு பிரச்சினையாகிவிட்டது, எப்படி.லிச்சி விளைச்சலைத் தடுக்கவே அதன் மீதான அவதூறுகளை கிளப்பி விடுவதற்கான சதித்திட்டங்கள் தீட்டப்படுவதுபோல்தான் எனக்கு தோன்றுகிறது.
பீகாரிலிருந்து இந்த லிச்சிகள் உலகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன, ஆனால் முசாபர்பூரைத் தவிர வேறு எங்கிருந்தும் எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை.இதுகுறித்து விசாரணை நடத்த உரிய துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளேன்.''
இவ்வாறு மாநில வேளாண்துறை அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வெறும் வயிற்றில் லிச்சிப் பழங்களை சாப்பிட்டாலும். இதுவிர காற்றில் ஈரப்பதம் குறைவதால் உடலில் நீரிழப்பு ஏற்படுவதாலும் இந்நோய்கள் தாக்கக் கூடும்'' என்று தெரிவித்திருந்தார்.