Last Updated : 24 Jun, 2019 01:19 PM

 

Published : 24 Jun 2019 01:19 PM
Last Updated : 24 Jun 2019 01:19 PM

சமாஜ்வாதியுடன் உறவு முறிந்தது?- அனைத்துத் தேர்தல்களிலும் தனித்துப் போட்டி- மாயாவதி அறிவிப்பு

எதிர்காலத்தில் நடக்கும் அனைத்துத் தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் கூட்டணி இல்லை என்பதை சூசகமாக மாயாவதி அறிவித்துள்ளார்.

லக்னோவில் மாயாவதி நேற்றுமுன்தினம்(சனிக்கிழமை) தனது கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்திய பின், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, பாஜகவை வீழ்த்தும் திட்டத்துடன் உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் இணைந்து மெகா கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன.

இந்தக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் மிக அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும் மட்டுமே வென்றது. 62 தொகுதிகளை ஆளும் பாஜக கைப்பற்றியது.

மக்களவைத் தேர்தல் குறித்த ஆய்வுகளில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு மிகுந்த தொகுதிகளில் எல்லாம் மாயாவதியின் கட்சிக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி செல்வாக்காக இருக்கும் தொகுதிகளில் எல்லாம் அகிலேஷ் கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது.

இதனால், மாயாவதி, அகிலேஷ் யாதவ் இருவருமே அதிருப்தியுடன் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

இதற்கிடையே, உத்தரப் பிரதேசத்தில் எம்எல்ஏக்களாக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த 9 பேர் எம்.பி.க்களாகவும், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் எம்.பி.யாகவும் தேர்வாகினர்.

இதனால் ஏற்பட்டுள்ள 11 காலியிடங்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட மாயாவதியும், அகிலேஷ் யாதவும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக சமீபத்தில் அறிவித்தனர். மாயாவதியுடனான கூட்டணி ஒரு சோதனை முயற்சிதான் என்று அகிலேஷ் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், மெகா கூட்டணி உடையுமா என்பதைக் குறித்து இருவரும் கூறவில்லை.

இந்த சூழலில் மாயாவதி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், "ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்கிறார்கள். கடந்த 2012- 2017 ஆம் ஆண்டு சமாஜ்வாதி ஆட்சியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கொண்டுவந்து தலித்துகளுக்கு எதிரான மோசமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

தேர்தலுக்குப் பின் சமாஜ்வாதி கட்சியின் நடத்தை எங்களை வலிந்து சில விஷயங்களை சிந்திக்க வைத்திருக்கிறது. பாஜகவை இப்போது  வீழ்த்த முடியாது என்றாலும் எதிர்காலத்தில் அது சாத்தியமாகும் என நம்புகிறோம்.

கட்சியின் நலன்கருதியும் தொண்டர்களின் விருப்பத்தின் படியும் கட்சியை வலுப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் வரும் சிறிய, பெரிய அளவிலான தேர்தல்களில் கட்சி தனித்தே போட்டியிடும்" என மாயாவதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x