

பிரதமர் நரேந்திர மோடி தனது 64-வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று தனது தாய் ஹிராபென்னை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது மோடியின் தாயார் ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக ரூ 5 ஆயிரம் வழங்கினார்.
பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நரேந்திர மோடி முதன்முறையாக நேற்று முன்தினம் சொந்த மாநிலத்துக்கு சென்றிருந்தார். தனது பிறந்த நாளை முன்னிட்டு, தாயாரை சந்திப்பதற்காக புதன்கிழமை காலை காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையிலிருந்து சகோதரர் வீட்டுக்குச் சென்றார்.
அங்கு தாய் ஹிராபென்னை சந்தித்து, அவரது காலைத் தொட்டு வணங்கினார். பின்னர் அவருக்கு இனிப்பு ஊட்டிய அவரது தாய் ஹிராபென், ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக ரூ.5,000 வழங்கினார். 15 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, மோடியின் உடல்நலம், பிரதமர் பணி குறித்து அவரது தாய் கேட்டறிந்தார்.
சகோதரர்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தலைவர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து களை தெரிவித்துக் கொண்டனர். குறிப்பாக, சீன அதிபர் ஜீ ஜின்பிங் நேற்று மதியம் குஜராத்துக்கு வந்தார். முன்னதாக, இந்தியாவுக் கான சீன தூதர் லீ யுசெங் புதன்கிழமை காலை காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் மோடியை நேரில் சந்தித்து சீன அதிபர் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இதுபோல ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.