Published : 04 Jun 2019 11:18 AM
Last Updated : 04 Jun 2019 11:18 AM

‘‘என் மகன் தோல்விக்கு சச்சின் பைலட் பொறுப்பேற்க வேண்டும்’’ - அசோக் கெலாட் கடும் விமர்சனம்

ராஜஸ்தானில் எனது மகன் தோல்விக்கு துணை முதல்வர் சச்சின் பைலட் பொறுப்பேற்க வேண்டும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இதன் மூலம், ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் உட்கட்சி மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்று இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறத் தவறிவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்கள் பெற்ற நிலையில் அதைக்காட்டிலும் சிறிது அதிகமான இடங்களை இந்தமுறை பெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற முடியவில்லை.

இந்த தோல்வி காங்கிரஸ் கட்சியில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மூத்த தலைவர்களை கடுமையாக சாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.

ஆனால், மூத்த தலைவர்கள் ராகுலின் ராஜினாமாவையும் ஏற்க மறுத்துவிட்டனர். இருப்பினும் தனது முடிவில் மாற்றமில்லை என அவர் உறுதியாக உள்ளார். பல்வேறு மாநிலங்களிலும் இந்த காங்கிரஸ் தோல்வி தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வரும், மூத்த தலைவருமான அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்படுகின்றனர். மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தோற்றது.

ஜோத்பூர் தொகுதியில் போட்டியிட்ட அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் 2.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்த அசோக் கெலாட், ‘‘ராஜஸ்தானில் காங்கிரஸூக்கு ஏற்பட்ட தோல்விக்கு சச்சின் பைலட் பொறுப்பேற்க வேண்டும். குறைந்தபட்சம் ஜோத்பூரில் எனது மகன் தோல்விக்காகவது அவர் பொறுப்பேற்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்களிடையே வெளிப்படையாக மோதல் வெடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x