

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக அறிவித்துள்ளார்.
முன்னணி நடிகையான ஜெயப்பிரதா, மார்ச் மாதத்தில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் ராம்பூர் மக்களவைத் தொகுதியை ஒதுக்கியது பாஜக. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அசாம் கான் போட்டியிட்டார்.
இவர் ஜெயப்பிரதா குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக எதிரொலித்தது. இதனால், ஜெயப்பிரதா வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்நோக்கினார்கள். அசாம் கானிடம் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயப்பிரதா தோல்வியடைந்தார்.
இந்தநிலையில் ராம்பூர் எம்.பி பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக அசம்கான் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக இருப்பதால் எனது தொகுதியில் எந்த நலத்திட்டமுமே செயல்படுத்தபடவில்லை.
இதனை சரி செய்ய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். அதற்கு முன்பாக எனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய விரும்புகிறேன். இதுகுறித்து கட்சித் தலைமைக்கு தெரிவிப்பேன்’’ எனக் கூறினார்.