

காஷ்மீரில் இன்று சிஆர்பிஎப் வீரர்கள் இருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்த விவரம்:
''அனந்தநாக் மாவட்டத்தில் கேபி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் இரு தீவிரவாதிகளால் தாக்கப்பட்டனர். முதலில் கையெறி குண்டுகளை வீசினர். அதன் பின்னர் தானியங்கி துப்பாக்கி ஒன்றினால் சுடத் தொடங்கினர். இதனால் 2 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். உடன் வந்த மற்ற 5 பேரும் படுகாயமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு தீவிரவாதியும் அடையாளம் தெரியாத ஒருவரும் கொல்லப்பட்டனர். இப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
அனந்தநாக் காவல் நிலைய அதிகாரி ஆர்ஷத் அகமது இதில் காயமடைந்த நிலையில் ஸ்ரீநகருக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்''.
இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.