Published : 01 Jun 2019 11:13 AM
Last Updated : 01 Jun 2019 11:13 AM

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு: எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ராகுல் காந்தி தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்று இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறத் தவறிவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்கள் பெற்ற நிலையில் அதைக்காட்டிலும் சிறிது அதிகமான இடங்களை இந்தமுறை பெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற முடியவில்லை.

இந்தத் தோல்வி குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட செயற்குழுக்கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மூத்த தலைவர்களை கடுமையாக சாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், மூத்த தலைவர்கள் ராகுலின் ராஜினாமாவையும் ஏற்க மறுத்துவிட்டனர். இருப்பினும் தனது முடிவில் மாற்றமில்லை என அவர் உறுதியாக உள்ளார். இந்தநிலையில் மக்களவைத் தேர்தலுக்கு பின்பு நாடாளுமன்றம் ஜூன் 6-ம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கவும், எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற செயல் திட்டத்தை வகுக்கவும் காங்கிரஸ் சார்பில் நேற்று நடத்த இருந்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்  டெல்லியில் இன்று நடைபெற்றது. நாடுமுழுவதும் காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 52 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் உள்ள காங்கிரஸ் எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில்,

காங்கிரஸ்  நாடாளுமன்ற கட்சியின் தலைவராக இருந்து வரும் சோனியா காந்தியை மீண்டும் அப்பதவிக்கு ஏகமனதாக தேர்வு செய்தனர். காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கட்சியை வழி நடத்த விரும்புவதாக கூறப்பட்டது.

எனினும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நீடிக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பதற்கான வியூகங்கள்  குறித்து விவாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x