Last Updated : 27 Jun, 2019 11:16 AM

 

Published : 27 Jun 2019 11:16 AM
Last Updated : 27 Jun 2019 11:16 AM

பாஜகவை எதிர்க்க எங்களுடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் இணைந்து செயலாற்ற வேண்டும்: மம்தா பானர்ஜி அழைப்பு

பாஜகவை எதிர்ப்பதற்கு காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த உத்தரப் பிரதேச மாடலைப் பின்பற்ற வேண்டும், என்கவுன்ட்டர் நடத்த வேண்டும்  என்று மாநில பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இது குறித்து மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

''நாடு முழுவதும் சிறுபான்மையினரை கும்பல் வன்முறையால் தாக்கிக் கொலை செய்வதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். இந்த நாடு அனைத்து சமூகத்தினருக்கும் உரியது.

சில பாஜக தலைவர்கள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார்கள். என்கவுன்ட்டர் நடத்துங்கள் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால், இவ்வாறு அத்துமீறி பேசும் பாஜக தலைவர்களுக்கு எதிராக ஏன் போலீஸார் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரியவில்லை. இதுபோன்று பேசும் பாஜக தலைவர்களுக்கு எதிராக போலீஸார் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யவேண்டும்.

ஜார்க்கண்டில் முஸ்லிம் இளைஞர் தாக்கிக் கொல்லப்பட்டதையும், அவரை ஜெய் ஸ்ரீராம் என்று கூறுவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டதையும் நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். கும்பல் வன்முறையால், மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். கும்பல் வன்முறையால் கொல்லப்படுவோம் என அஞ்சுகிறார்கள்.

நாட்டில் பாஜக வகுப்புவாதத்தையும், பிரிவினையையும் பரப்பிவிடுகிறது. இந்த நாடு முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின் மதத்தினர், சீக்கியர்கள் அனைவருக்கும் பொதுவானது. இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை பாஜக மாற்றிவிடும் என்று நான் அச்சப்படுகிறேன்.

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை அனுப்பியுள்ளது. ஆனால், நான் கேட்கிறேன், எங்களிடம் சட்டம் ஒழுங்கு குறித்தும் பேசும் மத்திய அரசு, ஏன் உத்தரப் பிரதேசத்தில் பேசுவதில்லை. ஹரியாணாவில் பேசுவதில்லை. அந்த மாநிலங்களுக்கு ஏதேனும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனைகள் அனுப்பினார்களா? அதற்கான பதில் இல்லையே. அரசியல்ரீதியாக இழிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு இதுபோன்ற நோட்டீஸ் அனுப்புகிறது.

மத்தியில் பாஜகவை எதிர்ப்பதற்கு எங்களுடன் காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும். வாக்குகள் பாஜகவுக்குச் சென்றால், மாநிலத்தில் வன்முறைதான் நடக்கும் என்பதுதான் சாட்சி.

மூன்று கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என கோரிக்கையோ, ஆலோசனையோ வைக்கவில்லை. ஆனால், சிலநேரங்களில் சில விஷயங்களில் ஒன்றாக இணைந்து தேசிய அளவில் செயல்படுவது அவசியம்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x