அசாமில் இருந்து 13 பேருடன் சென்ற இந்திய விமானப் படை விமானம் திடீர் மாயம்: 2016 தாம்பரம் விபத்து நினைவிருக்கிறதா?

அசாமில் இருந்து 13 பேருடன் சென்ற இந்திய விமானப் படை விமானம் திடீர் மாயம்: 2016 தாம்பரம் விபத்து நினைவிருக்கிறதா?
Updated on
1 min read

அசாம் மாநிலம், ஜோர்கட் விமானத்தளத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் திடீரென நடுவானில் மாயமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அசாம் மாநிலம், ஜோர்கட் நகரின் புறநகரில் உள்ள ரோவாரியா விமானத் தளம் இங்கிருந்து இன்று பிற்பகல் 12.25 மணிக்கு அருணாச்சலப் பிரதேசம், மெச்சுகா விமானத் தளத்துக்கு, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஐஏஎப் ஏஎன்-32 ரக விமானம் 13 பேருடன் புறப்பட்டது.

ஆனால், 12.25 மணிக்கு புறப்பட்ட விமானம் கடந்த 2 மணிநேரமாக அருணாச்சலப் பிரதேசத்தின் மெச்சுகா விமானத் தளத்துக்குச் சென்று சேரவில்லை. இதுதொடர்பாக மெச்சுகா விமானத் தளத்துக்கு தொடர்பு கொண்டுகேட்டபோதும் விமானம் குறித்து தகவல் ஏதும் இல்லை.

இந்த விமானத்தில் 5 பயணிகளும், 8 விமானப்படை வீரர்களும் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெச்சுகா விமானப்படைத் தளம் சீனாவின் எல்லை அருகே அமைந்துள்ளது. விமானம் குறித்த எந்தத் தகவலும் இல்லை என்பதால், விமானத்தைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதற்காக விமானப்படையின் சுகோய்-30, சி-130 ரக விமானங்கள் தேடுதல் வேட்டையில் இறக்கி விடப்பட்டுள்ளன. விமானம் ஏதும் விபத்தில் சிக்கியுள்ளதாக என்பது குறித்து விரைவில் தகவல் தெரியவரும்.

ஐஏப் ஏஎன்-32 ரக ஆன்டனோவ் விமானம்தான் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி விபத்தில் சிக்கியது. நினைவிருக்கிறதா?

தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானில் போர்ட் பிளேயருக்கு காலை 8.30 மணிக்கு புறப்பட்டது. வழக்கமான திட்டப்படி 11.45 மணிக்கு அந்த விமானம் அந்தமான் சென்றிருக்க வேண்டும். ஆனால், விமானம் வங்கக்கடலில் திடீரென மாயமாகியது.

அப்போது இந்த விமானத்தில் 11 விமானப்படைவீரர்கள், 2 ராணுவ வீரர்கள், உள்ளிட்ட 29 பேர் இருந்தனர். விமானத்தை கண்டுபிடிக்க வங்கக்கடலில் 16 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கிக் கப்பல், 6 விமானங்கள் தேடுதல் வேட்டையில் இறங்கின. ஆனால், விமானத்தை கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி விமானத்தை தேடும் பணி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in