Published : 20 Jun 2019 06:40 PM
Last Updated : 20 Jun 2019 06:40 PM

தெலுங்கு தேசம் கட்சியின்  நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர்

தெலுங்கு தேசம் கட்சியின் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான ஒய்.எஸ்.சவுத்ரியும் அடங்குவார். இதனால் மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் எம்.பி.க்களின் எண்ணிக்கை 2 ஆகக் குறைந்தது.

 

டி.ஜி.வெங்கடேஷ், சவுத்ரி, ஜி.மோகன் ராவ், மற்றும் சி.எம்.ரமேஷ் ஆகியோர் பாஜவில் சேர்வதை உறுதி செய்துள்ளனர். வெங்கடேஷ் ஏற்கெனவே அகிலபாரதிய வித்யா பரிஷத்தில் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சவுத்ரி இது தொடர்பாக கையெழுத்திட்ட தீர்மானத்தில், “நரேந்திர மோடிஜியின் அபாரமான தலைமைத்துவ திறமைகள் மற்றும் நாட்டின் நலன்களுக்கான வளர்ச்சிக் கொள்கைகளினால் ஊக்கம் பெற்று உடனடியாக பாஜகவில் இணைய திட்டமிட்டோம்” என்று கூறப்பட்டுள்ளது.

 

அரசியலமைப்புச் சட்ட விதிகளின் 10வது ஷெட்யூலின் படி நாடாளுமன்றக் கட்சியின் மூன்றில் 2 பங்கினர் கட்சி மாறினால் உறுப்பினர் பதவியை இழக்க மாட்டார்கள் என்று கூறுகிறது. ஆகவே கட்சித்தாவல் தடைச்சட்டம் இங்கு வராது என்று தீர்மானத்தில் இவர்கள் கூறியுள்ளனர்.

 

பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறும்போது, “தெலுங்கு மாநிலங்களின் பல்வேறு கட்சிகளின் பல தலைவர்கள் பாஜகவில் இணைய விரும்புகின்றனர். இவர்களை வரவேற்கிறோம்” என்றார்.

 

அயல்நாட்டில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, சவுத்ரியிடம் பேசி கட்சி மாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் தேர்தல் தோல்விகளுக்கு பொறுப்பேற்பின்மை காரணமாக கட்சியை உதறுவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x