உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியிடம் ஆன்-லைனில் ரூ.ஒரு லட்சம் மோசடி: போலீஸார் விசாரணை

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியிடம் ஆன்-லைனில் ரூ.ஒரு லட்சம் மோசடி: போலீஸார் விசாரணை
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியிடம் ஆன்-லைன் மூலம் ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதால் அவர் போலீஸில் நேற்று புகார் அளித்தார்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆர்.எம்.லோதா. தற்போது தெற்கு டெல்லியில் உள்ள பஞ்சசீல பூங்கா பகுதியில் வசித்து வருகிறார். ஆர்.எம்.லோதாவின் நண்பர் ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி.சிங். இருவரும் தங்களுக்கு தேவையான தகவல்களை மின்அஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டு வந்தனர். மேலும், பிற நண்பர்களிடமும் லோதா தனது தனிப்பட்ட மின்அஞ்சல் மூலம் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி இரவு 1.40 மணிக்கு ஆர்.எம்.லோதாவுக்கு அவரின் நண்பர் பிபி சிங் பெயரில் மின் அஞ்சல் வந்தது. அந்த மின்அஞ்சலில் தன்னுடைய உறவினர் ஒருவரின் மருத்துவச் செலவுக்கு உடனடியாக ரூ.ஒரு லட்சம் தேவைப்படுகிறது. என்னால் தொலைபேசியில் பேச முடியாத சூழலில் இருக்கிறேன் என்று தெரிவித்து, பணத்தை மருத்துவரின் வங்கிக்கணக்கில் செலுத்திவிடுமாறு வங்கிக்கணக்கையும் தெரிவித்திருந்தார்.

 அதற்கு உடனே முன்னாள் நீதிபதி லோதா மறுநாள் காலையில் ரூ.50 ஆயிரமும், மாலையில் ரூ.50 ஆயிரமும் செலுத்துகிறேன் என மின்அஞ்சலில் பதில் அளித்தார். தான் சொன்னபடி மறுநாளில் ரூ.ஒரு லட்சம் பணத்தை அந்த குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 18 ம் தேதி முதல் ஓய்வுபெற்ற நீதிபதி பிபி சிங்கின் மின்அஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டு செயல்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப்பின் கடந்த மாதம் 30-ம் தேதிதான் அந்த மின் அஞ்சல் மீண்டும் பிபி சிங்கின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த 30-ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி.சிங், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் தன்னுடைய மின்அஞ்சல் கணக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி முதல் ஹேக் செய்யப்பட்டு மே 30-ம் தேதிதான் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது என்று குறிப்பிட்டு, தனது மின்அஞ்சலை யாரோ ஹேக் செய்துள்ள விவரத்தையும் தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த ஆர்எம் லோதா தான் ஆன்-லைன் மூலம் மோசடி செய்யப்பட்டதை அறிந்தார். இதையடுத்து, டெல்லி மாளவியா நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் துணை ஆணையர் மற்றும் சைபர் பிரிவு போலீஸாரிடமும்  லோதா புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து ஐடி சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in