

நாளுக்கு நாள் உயரும் வெப்பநிலையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள மாநிலத்தின் பல பகுதிகளிலும் வாடிக்கையாளர் அதிக அளவில் பீர் அருந்தத் தொடங்கியுள்ளதால் தெலுங்கானா அரசு மது விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று மழை பொய்த்துள்ள நிலையில் மே மாதம் அடித்த வெயிலின் தாக்கத்திற்கு சற்றும் குறையாமல் மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் தெலங்கானாவில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
தெலங்கானா மாநில பீவெரேஜன் கார்ப்பரேஷன் லிமிட் தயாரிப்பின் மொத்த விற்பனைப் பிரிவிலிருந்து கடந்த மே மாதத்தில் மட்டும் 61 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையாகியுள்ளன. ஏப்ரலில் 57 லட்சம் பெட்டிகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு எண்ணிக்கையில் பீர் விற்பனை என்பது நாட்டிலேயே மிகமிக அதிகமானதாகும்.
பீர் விற்பனை அதிகரித்துள்ளதால் அதற்கு ஈடுகொடுக்கும் அளவில் உற்பத்தி நடக்கவில்லை. உற்பத்தியாளர்களுக்கு சில இடங்களில் நிலத்தடி நீர் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிலத்தடி நீர் பற்றாக்குறையால் பீர் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வேறு சில இடங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பீர் உற்பத்தி வசதிகளுக்கு நீர் விநியோகத்தை ஒழுங்குபடுத்த உத்தரவிட்டது. இதன் விளைவாக உற்பத்தி குறைகிறது என்று பிடிஐக்கு கிடைத்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நிலவரம் அறிய தெலங்கானா ஒயின் டீலர்கள் அசோஸியேஷனின் பொதுச் செயலாளர் டி.வெங்கடேஸ்வர ராவை பிடிஐ தொடர்புகொண்டது.
அப்போது அவர் பேசுகையில், ''மதுக்கடைகளுக்கு பீர் வழங்கல் கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைந்துள்ளது. பிரீமியம் விலையில் பீர் கிடைப்பது போதுமானது எனினும் சாமானியர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சில பிரபல பிராண்டுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொதுவாக நாடு முழுவதும் கோடை மாதங்களில் பீர் பற்றாக்குறை இருக்கும். தெலங்கானாவில் நிலவும் வெயில் தாக்கம் காரணமாக இந்த முறை அதிக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மற்றபடி வெயில் காலம் என்றில்லை, ஆண்டு முழுவதுமே இங்கு பீர் நுகர்வு அதிகமாக உள்ளது'' என்றார்.