

பிரதர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்தப்படும் என்று முகவரி இல்லாமல் கடிதம் வந்ததைத் தொடர்ந்து, உளவுப்பிரிவினர், பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் முன் கேரள மாநிலம் சென்றார். கடந்த 8-ம்தேதி குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்ற போது மிரட்டல் கடிதம் ஒன்று கோயிலுக்கு வந்துள்ளது. அதாவது, குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு பிரதமர் மோடி வருவதற்கு முதல்நாள் இரவு 7 மணிக்கு கடிதம் வந்துள்ளதாக கோயிலின்பெயர்வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால், இதுவரை மிரட்டல் கடிதம் குறித்து உளவுப்பிரிவினர் வெளியிடாத நிலையில் இப்போது கசிந்துள்ளது.
அந்த அதிகாரி கூறுகையில், " பிரதமர் மோடி கோயிலுக்கு வருவதற்கு முதல்நாள் எங்கள் கையில் இந்த கடிதம் கிடைத்தது. கடிதத்தில் எந்த முகவரியும் இல்லை. கடிதத்தைப் பார்த்தவுடன் மிகுந்த அச்சமடைந்து நாங்கள் உடனடியாக பிரதமரின் தனிப்பிரிவு பாதுகாப்புக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள்அனைத்து விதமான பாதுகாப்புகளையும் பலப்படுத்தினார்கள்.
இந்த தகவலை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று எங்களுக்கு பாதுகாப்பு படையினர் உத்தரவிட்டனர். மேலும், உளவுப்பிரிவுக்கு இதுகுறித்து அறிக்கை அனுப்ப இருப்பதால், யாருக்கும் தெரியக்கூடாது என்றனர். அவர்கள் மூலம் சிறப்பு பிரிவு பாதுகாப்பு படையினருக்கும போலீஸாருக்கும் தெரிவிக்கப்பட்டது.
அந்த கடிதம் மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் மாறி, மாறி எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதம் எங்கிருந்து வந்தது என்பது போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடிதத்தில் ரூ.5 தபால்தலை ஒட்டப்பட்டு இருந்தது " எனத் தெரிவித்தார்.
உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், " பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பாதுகாப்பு விதிமுறையின்படியே செய்யப்படும். எந்தவிதமான குளறுபடிகளும் ஏற்படாதவகையில் பாதுகாப்புக்கு என தனிப்பிரிவு அதிகாரி மேற்பார்வை மூலம் நடக்கும். பிரதமர் மோடிக்கு ஏதேனும் மிரட்டல் வந்தால், அந்த செய்திகளை பாதுகாப்பு பிரிவின் ஒரு பிரிவு மட்டும் ஆய்வு செய்யாமல் பல்வேறு பிரிவுகளும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்.
குறிப்பாக எஸ்பிஜி பிரிவுக்கு உளவுத்துறை, மாநில போலீஸார், ராணுவம் ஆகியவற்றுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார்கள்." எனத் தெரிவிக்கின்றன.