Published : 01 Sep 2014 11:28 AM
Last Updated : 01 Sep 2014 11:28 AM

சார்க் மாநாட்டில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது: உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்

நேபாளத்தில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டில் பாகிஸ்தான் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

செப்டம்பர் 18 மற்றும் 19-ம் தேதிகளில் சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு நேபாளத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். அப்போது, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் நிசார் அலிகானை ராஜ்நாத் தனியாகச் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வெளியாயின.

இது குறித்து மத்திய அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சார்க் மாநாட்டில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக வெளியான செய்திகள் தவறானவை. தீவிரவாதம் மற்றும் வன்முறையைக் கைவிடும் வரை பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பில்லை என மத்திய உள்துறை அமைச்சர் கருதுகிறார்’ என கூறியுள்ளது.

இந்தியாவுடன் சமாதா னப்பேச்சு நடத்துவதில் முனைப்பு கொண்டிருந்த பாகிஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. மேலும், இதில் இந்தியாவுடன் நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தை தொடர்பாக காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸின், கடந்த 18-ம் தேதி தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் ஆகஸ்ட் 25-ல் நடக்க இருந்த இருநாட்டு வெளியுறவுச் செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்தது.

இது குறித்து கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹரியாணாவின் பல்வலில் நடைபெற்ற ’விஜய் சங்கல்ப் யாத்ரா’ பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் பேசும்போது, “சமாதானத்தை விரும்புகிறது என்பதற்காக இந்தியாவை பலம்குன்றிய நாடாகக் கருதிவிடக் கூடாது. தொடர்ந்து பாகிஸ்தான், போர் நிறுத்த ஒப்பந்த மீறலை செய்து வந்தால் அதற்கு இந்திய இராணுவம் சரியான பதிலடி தரத் தயங்காது.

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு வெள்ளைக் கொடி காட்டாமல், பதிலடி தரும்படி எல்லைப் பாதுகாப்பு படையின் இயக்குநருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.’ எனக் கூறினார்.

இது குறித்து ராஜஸ்தானின் ஜெய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய செய்தித்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை எனில் அது, பாகிஸ்தானுக்கு நல்லதாக இருக்காது. அவர்கள், தீவிரவாதிகளுடன் பேசிவிட்டு, நம்முடன் பேச முயல்வது சரியானது அல்ல’ எனத் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 17-ம் தேதி முதல் தொடர்ந்து 45 நாட்களில் 34 முறை பாகிஸ்தான், போர் ஒப்பந்தத்தை மீறியுள்ளது. இதில் ஜம்முவைச் சேர்ந்த இரு பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் எல்லை பாதுகாப்பு படையினர் 4 பேர் உட்பட 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது, 1971-ஆம் ஆண்டின் போருக்கு பின் நடந்த மிக அதிகமான போர் ஒப்பந்த மீறல் தாக்குதலாகக் கருதப்படுகிறது.

இதற்காக இருநாட்டு எல்லை பாதுகாப்பு படையினரால் மூன்று கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x