Published : 07 Jun 2019 11:57 AM
Last Updated : 07 Jun 2019 11:57 AM

நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரிலேயே முத்தலாக் சட்டம்: மத்திய அரசு முடிவு

முத்தலாக் சட்டத்தை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.  

முஸ்லிம் ஆண்கள் 3 முறை தலாக் (முத்தலாக்) கூறி மனைவியை விவாகரத்து செய்வது வழக்கமாக உள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த நடைமுறை சட்டவிரோதமானது என அறிவித்தது.

இது தொடர்பாக சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி, முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. உடனடியாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்றும் அது செல்லாது என்றும் அந்த மசோதா கூறுகிறது.

மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து, மத்திய அரசு முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) அவசர சட்டத்தை 2 முறை பிறப்பித்தது.

ஆனால் 16-வது மக்களவையின் பதவிக் காலம் முடிந்ததால், முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் முஸ்லிம் பெண்கள் மசோதாவும் காலாவதி ஆகிவிட்டது.

இந்தநிலையில் மத்தியில் பாஜக கூட்டணி அரசு மீண்டும் பொறுப்பேற்ற பிறகு நாடாளுமன்றம் வரும் வரும் 17-ம் தேதி மக்களவை கூடுகிறது.

மக்களவையின் தற்காலிக தலைவராக மேனகா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 542 உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். வரும் 19-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்கின்றனர். இதைத்தொடர்ந்து, 20-ம் தேதி மாநிலங்களவை கூடுகிறது. அன்றைய தினம் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தொடரிலேயே முத்தலாக் சட்டம் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. அவசரச் சட்டம் காலாவதியாகி விட்டதால் மீண்டும் சட்டத்தை இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x