மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு

மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு
Updated on
1 min read

மக்களவை  காங்கிரஸ் தலைவராக மேற்குவங்க மாநில எம்.பி.யும், மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்று இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறத் தவறிவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்கள் பெற்ற நிலையில் அதைக்காட்டிலும் சிறிது அதிகமான இடங்களை இந்தமுறை பெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற முடியவில்லை.

இந்தத் தோல்வி குறித்து ஆய்வு செய்ய நடந்த கூட்டத்தில் மூத்த தலைவர்களை கடுமையாக சாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், மூத்த தலைவர்கள் ராகுலின் ராஜினாமாவையும் ஏற்க மறுத்துவிட்டனர்.

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் பதவியை அவர் வகிக்கக்கூடும் என தகவல் வெளியானது. ஆனால் அந்த பதவிக்கு மீண்டும் சோனியா காந்தியே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். கடந்த மக்களவையில் காங்கிரஸ் குழுவின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இருந்தார் ஆனால் இந்தமுறை அவர் தோல்வியடைந்து விட்டார். மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவரை காங்கிரஸ் எம்.பி.க்கள் தேர்வு செய்ய வேண்டும்.

மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிபிஐ இயக்குநர், ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவர் தேர்வு போன்றவற்றில் இவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே அனுபவம் வாய்ந்த ஒருவரை இந்த பதவிக்கு தேர்வு செய்ய விரும்பிய காங்கிரஸ் தலைமை, கேரள மாநிலத்தில் இருந்து 7 முறை காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ், மேற்கவங்க மாநிலத்தில் இருந்து 5 முறை  காங்கிரஸ் சார்பில் எம்.பி.யான ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோர் பெயர்களை பரிசீலித்தது.

இறுதியாக மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது. காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியா இல்லத்தில் நடந்தது. இதில், ஏ.கே.அந்தோணி, ஜெய்ராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் மக்களவை எம்.பி.,க்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  எனினும் இதனை அதிகார பூர்வமாக காங்கிரஸ் அறிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in